இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காத வரை சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புத் தொடரும் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 228

இறைமைக்கு முன்னுரிமை கொடுக்காத வரை
சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புத் தொடரும்

ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களின் ‘இந்த மண் எங்களின் சொந்த மண்’ என்னும் அவர்களின் இறைமைக்கு முன்னுரிமை கொடுத்துத் தங்களின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்காதவரை “வெடுக்கு நாறி ஆசி சிவன் சிவலிங்கம்” என்னும் ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தொன்ம அழிப்புப் போன்ற சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புத் தொடரும் என்பது வெளிப்படையான உண்மை. இந்த வழிபாட்டிடம் ஆகமப்பட்ட சைவ வழிபாட்டுத் தலமாக மட்டும் விளங்காது சிங்கள குல முதல்வன் எனப்படும் விஜயனின் ஈழத்து அரசியல் புகலிட வாழ்வுக்கு முற்பட்ட வரலாற்றுக் காலம் முதலான ஈழத்தமிழரின் தொன்மை மிகு நாகர் இனவழிபாட்டிடத்தின் எச்சமாக, ஈழத்தமிழினத்தின் இறைமையின் தொன்மைக்கும் தொடர்ச்சிக்கும் சான்றாதாரமாக விளங்கி வருகிறது. இங்கு மக்கள் ஏறிச்சென்று வழிபட கற்படி அமைக்கக் கூடச் சிறிலங்கா தொல்லியல் திணைக்களம் தடுத்து வந்தது இந்த பண்பாட்டு இனஅழிப்பைச் செய்ய என்பது இப்பொழுது உறுதியாகியுள்ளது.
ஈழத்தமிழர்களின் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையை ஒடுக்க 01. அவர்களின் இறைமைக்குச் சான்றாதாரமாகத் திகழும் வரலாற்று அடையாளங்களை அழித்தல், 02. புத்தசிலையினை கச்சதீவு முதல் ஈழத்தமிழர் தாயகம் எங்கும் வலுக்கட்டாயமாக மக்களின் விருப்பின்றி பரவலாக நிறுவி ஈழத்தமிழர் தாயகத்தைச் சிங்கள பௌத்த பூமியென உலகுக்குத் திரிபுபடுத்திக் காட்டல், என்கின்ற இரு நோக்குகளை சிறிலங்கா ஒரே நேரத்தில் படைபல மேலாண்மையின் கீழ் பௌத்த பிக்குகளின் திட்டமிடல் நெறிப்படுத்தல் முகாமைத்துவப்படுத்தலில் செய்து வருகிறது. இந்த சிங்கள பௌத்த அரசியல் கொள்கை-கோட்பாட்டின் நடைமுறைப்படுத்தலின் வெளிப்பாடே இந்த ஈழத்தமிழரின் பழங்குடி வாழ்வினை மறைக்க முயலும் பழங்குடி மக்களால் உருவாக்கப்பட்டு இன்று வரை தொடரும் வழிபாட்டிடங்களை அழித்தல் என்னும் சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புச் செயற்திட்டமாகத் தொடர்கிறது. இந்த சிறிலங்காவின் ஈழத்தமிழர் மீதான பண்பாட்டு இனஅழிப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயகமெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து சனநாயக வழிகளில் தங்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் மார்ச் 20இல் சிறிகாந்தா தலைமையில், அரசியல் கட்சிகளின் இணை எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பு செயற்பாடுகள் வேண்டுமென்றே நன்கு திட்டமிடப்பட்ட அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றச்செயல் என்பதை உலகத்தமிழர்களும் தாயகத் தமிழர்களுடன் இணைந்து உலகுக்குத் தெளிவாக எடுத்துரைத்து ஈழத்தமிழர்கள் மேலான பண்பாட்டு இனஅழிப்பு, இனத்துடைப்பு, இனஅழிப்பு என்னும் மூவகை அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான
குற்றச்செயல்களையும் சிறிலங்கா தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கிறது என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழர் தாயகப்பகுதியை “தன்னாட்சி பெறாத நாட்டெல்லைகளை கொண்ட பகுதி” என அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் சிறிலங்காப் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்த வேண்டுகோளின் அவசர தேவையை உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் விளங்கிக்கொள்வர்.
ஈழத்தமிழ் தாயகத்தில் இருந்து வெளிவரும் ‘தீம்புனல்’ ஏப்ரல் முதலாம் திகதிய “தமிழ் மக்களுக்கு எதிரான கலாச்சாரப் போர்” என்னும் ஆசிரிய தலையங்கம், சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட வகையில் பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றி தங்களின் பண்பாட்டு இனஅழிப்பை பௌத்தமத பண்பாட்டு மீட்பு என உலகுக்கு உறுதிப்படுத்தியே இந்த பண்பாட்டு இனஅழிப்பைச் செய்வதை வெளிப்படுத்தியுள்ளது. “இலங்கையின் 823/73 ஆம் இலக்க தொல்லியல் கட்டளைச் சட்டம் 188ம் இயலில் 16ம் பிரிவின் கீழ் வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருக்கும் பல சைவசமய ஆலயங்களில் பௌத்த மதம்சார்ந்த அடையாளங்கள் இருப்பதாக ரணில் – சிறிசேனா நல்லாட்சிக் காலத்திலும், அதற்கு முந்திய சிங்கள அரசாங்கங்களின் காலத்திலும் தொல்லியல் திணைக்களத்திற்கான சிறப்பு வர்த்தமானிகள் மூலம் உலகுக்கு சிறிலங்கா வெளிப்படுத்தியது. இவ்வாறு சிறிலங்கா தனது பண்பாட்டு இனஅழிப்புக்கான சட்டத் தகுதியைப் பெற்றுள்ளதைத் ‘தீம்புனல்’ குறிப்பிட்டுள்ளது.
. இச்சட்டம் குறித்து ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அலட்சியமாக இருந்ததின் விளைவே இன்று சிறிலங்கா பண்பாட்டு இனஅழிப்பைச் செய்வதை நீதிமன்றங்கள் மூலம் தடுக்க இயலாதிருப்பதன் காரணியாகவுள்ளது. இது ஈழத்தமிழ் மக்களின் விருப்பை வாழ்வை வெளிப்படுத்தும் புதிய அரசியல் தலைமையின் தேவையை உறுதிப்படுத்துகிறது. கூடவே; சிறிலங்கா வர்த்தமானி அறிவிப்பால் பௌத்த பூமிகளாக்கப்படவுள்ள சைவ வழிபாட்டுத்தலங்களின் நீண்ட பட்டியலையும் ‘தீம்புனல்’ தந்துள்ளது. அத்துடன் வெடுக்குநாறிமலை, குருந்தூர் மலை, கன்னியா வெந்நீர்ஊற்று, யாழ்ப்பாணம் மந்திரி மனை, நெடுந்தீவு வெடியரசன் கோட்டை என்பனவற்றின் மீது தொல்லியல் திணைக்களப் பார்வை ஏற்கனவே விழுந்துள்ளது என்பதையும் ‘தீம்புனல்’ சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தொல்லியல் திணைக்களம் ‘இலங்கைத் தீவு சிங்களவர் நாடு’ என்ற கோட்பாட்டுடன் தமிழ் முஸ்லீம் மலையக தொல்லியல் ஆராய்ச்சியாளர் எவருக்கும் இடம் கொடாத, சிங்களத் தொல்லியல் திணைக்களமாகத் தனது சிங்கள பௌத்த மயமாக்கத்தை வரலாறாக வெளிப்படுத்தி வருவதையும் தீம்புனல் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நேரத்தில் சிறிலங்காவால் குடிசார் உரிமைகளும் மனித உரிமைகளும் மறுக்கப்படுகின்றன எனவும், பொறுப்புக்கூறல் செய்யப்பட வேண்டுமெனவும், சிறிலங்கா ஏதோ மனித உரிமைகள் விடயத்தில் முன்னேறி வருவது போலவும், வெறுமனே எழுத்தறிக்கை விடுத்து, அதனை மாற்ற அனைத்துலகச் சட்டங்களின் கீழ் எதனையும் இதுவரை செய்யாது, சிறிலங்காவின் இனத்துடைப்புக்குக் காலஅவகாசம் கொடுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு, அவர்களும் ஈழத்தமிழின அழிப்புக்கான சிறிலங்காவின் ஊக்கிகளாக விளங்குவதை இந்த பண்பாட்டு இனஅழிப்பை எடுத்துரைப்பதன் மூலம் உணரச் செய்தல் அவசியம். அத்துடன் இனஅழிப்பில் இருந்து ஈழத்தமிழர்களைக் காக்க, ஈழத்தமிழர்களின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் விடுத்த “தன்னாட்சி பெறாத நாட்டெல்லையாகத் தமிழர் தாயகத்தை அறிவியுங்கள்” என்ற வேண்டுகோளை உடனடியாக ஐக்கிய நாடுகள் சபை நடைமுறைப்படுத்த உரிய செயற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்துலக நாடுகளையும் உலகத்தமிழர் வற்புறுத்திக் கேட்க வேண்டிய நேரமிது என்பது இலக்கின் உறுதியான எண்ணம்.

Tamil News