பிரித்தானியா இருதேச இறைமைகளை ஒருதேச இறைமையாக்கி பெரும்பான்மையினர் ஆட்சியைத் தோற்றுவித்த 75வது ஆண்டு | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 220

பிரித்தானியா இருதேச இறைமைகளை ஒருதேச இறைமையாக்கி பெரும்பான்மையினர் ஆட்சியைத் தோற்றுவித்த 75வது ஆண்டு

ஈழத்தமிழர் வரலாற்றில் 04.02.1948 என்பது ஆங்கிலேயர்கள் தமிழ் சிங்கள தேசங்களுடன் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இருந்து வந்த இலங்கையைத் தங்களின் சந்தை நலன்களுக்காகவும் இராணுவப்பாதுகாப்புத் தேவைகளுக்காகவும் 1796 இல் கைப்பற்றி அன்று முதல் இலங்கை அரசாங்கம் என்னும் செயற்கையாகத் தங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சிமுறைமையூடாக 152 ஆண்டுகாலங்கள் ஆட்சி செய்த பின்னர் தங்களின் குடியேற்ற ஆட்சிக்குரிய தன்மையை விலத்தி இலங்கைத் தீவின் மக்களுக்குச் சுதந்திரம் வழங்குவதாக இருதேச இறைமைகளையும் ஒருதேச இறைமையாக்கிய தமது காலனித்துவ ஆட்சிமுறையை உறுதி செய்து சிங்களப் பெரும்பான்மை நவகாலனித்துவ ஆட்சியைத் தோற்றுவித்த நாளாக உள்ளது. இதன் மூலம் ஈழத்தமிழரின் இறைமையை நிரந்தரமாக சிங்களப் பெரும்பான்மை ஆட்சி முடக்குவதற்குப் பிரித்தானியா அரசியலமைப்பினை வழங்கியதால் இந்நாள் அன்று முதல் இன்று வரை 75 ஆண்டுகளும் ஈழத்தமிழர்களுக்கு அவர்களின் சமூக பொருளாதார, அரசியல் ஆன்மீக விடுதலையை ஒடுக்கிய கரிநாளாகவே தொடர்கிறது. இதனை யாழ்ப்பாண பல்கலைகழகச் சமுகத்தினரின் மட்டக்களப்பு வரையிலான கரிநாள் பேரணிச் செயற்பாடு உறுதி செய்கிறது
மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தாமே தீர்க்காது அவற்றைத் தீர்க்கும் இறைமையாளராக மாறச் சிங்களப் பெரும்பான்மையினரை பிரித்தானியா அனுமதித்ததால் ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை அனைத்துலகச் சட்டங்கள் முறைமைகளின் படி ஐக்கியநாடுகள் சபையால் தீர்க்கப்பட வேண்டிய காலனித்துவகாலப் பிரச்சினையாகவே இன்று வரை தொடர்கிறது. இதனை உலகத் தமிழர்கள் உலக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.
தமிழர்கள் யாழ்ப்பாண அரசியல் இறைமையுடன் இருந்த காலத்திலேயே கோட்டே சிங்கள அரசைப் போர்த்துக்கேயர் விதியப்பண்டாராவின் ஆண்மக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாரிசுப் போட்டியின் பின்னணியில் கைப்பற்றிய வரலாறு நிகழ்ந்தது. அப்பொழுது கோட்டே அரசனான விதியப்பண்டாரா யாழ்ப்பாண அரசின் தலைநகராகத் திகழந்த நல்லூரிலேயே அரசியற் புகலிடம் பெற்று வாழ்ந்து போர்த்துக்கேயரைத் தாக்கப் பீரங்கி மருந்தினைத் தயாரிக்கும் பொழுது ஏற்பட்ட வெடிவிபத்தில் காலமாக, அவனது வீரத்தையும் தேசப்பற்றையும் போற்றி பூதவராயர் கோயில் என்ற சமாதிக் கோயில் நல்லூரில் யாழ்ப்பாண அரசனால் அமைக்கப்பட்டது என்பது சிங்கள இறைமையைப் பேணத் தமிழ்இறைமையாளர்கள் அளித்த நட்பின் வெளிப்பாடாக உள்ளது. அவ்வாறே கண்டி அரசின் அரசனான நரேந்திரசிங்காவுக்கு (1707-1739) அரசவாரிசு இல்லாது போன நேரத்தில் அரசகுலத்தவரே அரசனாக நியமிக்கப்படலாம் என்ற பொதுவிதிக்கு ஏற்ப தெலுங்கு தேசத்து தமிழ் அரசகுலத்தைச் சேர்ந்த விஜயராஜசிம்காவே ( 1739 -1747) கண்டிக்கு அரசனாக்கப்பட்டதும் அதனைத் தொடர்ந்து தமிழர்களான கீர்த்தி சிறி ராஜசிம்காவும் ( 1747 – 1782) ராஜாதிராஜசிம்காவும் (1782-1798) சிறிவிக்கிரம ராஜசிம்கா (1798-1815) கண்டி அரசின் அரசர்களான விளங்கியமையும் வரலாறு. கீர்த்தி சிறிராஜசிம்காவே தானும் பௌத்தனாகி மல்வத்தை அஸ்கிரிய மடங்களுக்கு மகாநாயக்க தேரோக்களை நியமிக்கும் முறைமைகளை உருவாக்கி பெருமளவிலான நிலங்களை இந்த மகாநாயக்க தேரோக்களால் நிர்வகிக்கப்படுவதற்கு வழங்கி பௌத்த அமுக்கக் குழுக்கள் ஈழத்து அரசியலில் தோன்ற வழிசெய்தான் என்பதும் வரலாறு. இவைகள் தமிழரின் இறைமை அதற்கான முழு ஆற்றலுடன் இருந்த காலங்களிலும் முழுஆற்றலுடன் இருக்கப் போராடிய காலங்களிலுமே உலகில் சிறிய தேச இனமான சிங்களவர்களின் இறைமையும் மொழியும் பண்பாடும் பாதுகாக்கப்பட்டத் தமிழர்களும் துணைசெய்தனர் என்பதைத் தெளிவாக்குகிறது. எனவே சிங்களத் தலைமைகள் தமிழரின் இறைமையைத் தங்களுக்கான இணைப்பாதுகாப்பாகச் செயற்பட அனுமதித்தாலே இன்றைய இலங்கைத் தீவின் பொருளாதார நெருக்கடிகளும் உலக வல்லாண்மை பிராந்திய மேலாண்மைகளின் இறைமைக்குள் இலங்கைத் தீவு அடிமைப்படும் இன்றைய நிலைகளும் மாற்றம் பெறும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டிய நேரமிது.
பிரித்தானிய காலனித்துவ ஆளுநர்களே திட்டமிட்ட வகையில் கண்டியில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை பிரித்தாளும் அரசகொள்கையாக ஊக்கப்படுத்தி கண்டி அரசை வீழ்த்தி பிரித்தானிய அரசு உருவாக வழிவகுத்ததும் அல்லாமல் தமிழர்களை கண்டியை விட்டு வெளியேற்றி அவர்கள் மீளவும் கண்டிக்குள் வராதவாறு தடையுத்தரவுகள் பிறப்பிக்கச் செய்து வன்னித் தமிழர்களின் உதவிகளை இழக்கவைத்து கண்டி அரசை 1815இல் கைப்பற்றினர். அடுத்து தமிழரின் வன்னி அரசையும் 1832இல் கைப்பற்றி இலங்கை முழுவதையும் காலனித்துவ ஆட்சிக்குள் கொண்டு வந்தனர். காலனித்துவ விலகலின் பின்னும் தேசங்களாக இருந்த தமிழ் சிங்கள முடியாட்சிகளை அந்த இயல்புநிலையை மறுத்து பெரும்பான்மைச் சிறுபான்மை அடிப்படையில் ஒரேஆட்சியாக அமைத்துப் சிங்களப் பேரினவாத பெரும்பான்மை ஆட்சியை நவகாலனித்துவமாகத் தொடர வழி செய்து வருகின்றனர். இந்தப் பிரித்தாளும் தந்திரமே இன்று வரை இலங்கைத் தீவு அதன் மக்களின் ஒருமைப்பட்டால் தனக்கான பொருளாதாரபலத்தைப் பெறாது உலகின் வல்லாண்மைகளிலும் பிராந்திய மேலாண்மைகளிலும் தங்கி வாழ்ந்து வறிய நாடாகி இன்று வங்குரோத்துநாடாக மாறும் அபாயத்தினை அடையவைத்துள்ளது. 1970கள் முதல் 1989 வரை சிங்கள மக்களின் போராட்டங்களிலும் கடந்த 2022ம் ஆண்டு அரகலியப் போராட்டத்திலும் உலக வல்லாண்மைகளின் ஊடுருவல் வழியாகவே சிங்கள மக்களின் போராட்டச் சுதந்திரம் ஒடுக்கப்பட்டது. ஈழத்தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றிலும் 1978 முதல் 2009 வரை அவர்களின் தேச உருவாக்கத்தையும் நடைமுறை அரசையும் உலக வல்லாண்மைகளினதும் பிராந்திய மேலாண்மைகளதும் ஊடுருவல்களே ஈழத்தமிழ் மக்களின் அரசியல் போராட்டங்களைப் பிரிவினை எனவும் உயிர் உடல் உடைமைகள் பாதுகாப்புக்கான ஆயுத எதிர்ப்புக்களைப் பயங்கரவாதமெனவும் வரைவிலக்கணப்படுத்தி அரசபயங்கரவாதச் செயல்களை ஊக்கப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் மூலம் ஈழத்தமிழரின் இறைமையை மீளவும் சிங்கள பௌத்த பேரினவாதம் ஆக்கிரமிக்க வழி செய்தன. சமகாலத்திலும் ஈழத்தமிழரின் இறைமை முடக்கப்பட்டதன் பின்னர் இன்று சிங்கள மக்களின் இறைமை முடக்கப்பட்டு நாடே 7 மில்லியன் மக்கள் உணவுப்பஞ்சத்தில் இருக்கின்ற நிலையில் 75வது சுதந்திர நாளை எதிர்கொள்கிறது. வீண்செலவு வேண்டாமென மக்கள் எதிர்ப்புப் போராட்டங்களை நடத்துவதைக் கவனத்தில் எடுக்காது 6000 படை வீரர்களின் ஆடம்பர மகிழ்ச்சி அணிவகுப்புடன் உலகுக்கு சிறிலங்கா ஒரேநாடு ஒரே சட்டத்தை முன்னெடுக்கும் உறுதியான அரசாகவே இருக்கிறது எனக் காட்டி குறுகிய காலத்தில் கடன்களைப் பட்டு உல்லாசமாக வாழ நாட்டை விற்று இலங்கை மக்களின் சுதந்திரத்தை நீண்டகாலத்தில் இழக்க வைக்க பல மில்லியன் பவுண்சுகளை செலவழித்து 75வது சுதந்திரநாளை கோலாகலமாக வெளிநாட்டு தலைவர்கள் ராஜதந்திரிகள் புடைசூழ மக்களை மறந்த அரசாகக் கொண்டாடியுள்ளார். தானே இலண்டன் நகரசபைக்கு இருக்கிற அதிகாரம் கூட இல்லையெனத் தானே விதந்துரைத்துள்ள 13வது திருத்தத்தின் மூலம் ஈழத்தமிழர் தேசியப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப் போவதாக கடன்வழங்கு அமைப்புகளுக்கும் நாடுகளுக்கும் பெப்ருவரி தனது அடுத்த கால்நூற்றாண்டுக்கான கொள்கை(ளை)ப் பிரகடன உரையில் கூறவும் போகிறார். அதே வேளை ஏற்கனவே 13வது திருத்தத்தைக் கூட நடைமுறைப்படுத்த விடமாட்டோம் எனச் சிங்கள தலைமைகளும் பௌத்த பீடாதிபதிகளும் சூளுரைத்து நிற்கின்றனர். இந்த அமுக்கக் குழு அரசியலை மாற்றத் தமிழ் சிங்கள முஸ்லீம் மலையகத் தமிழ் மக்கள் இணைந்து சிங்கள தமிழ் மக்களின் இறைமைகளையும் முஸ்லீம் மலையக மக்களின் அரசியல் உரிமைகளையும் நட்புறவாக ஏற்பதே ஒரே வழியாக இலக்கு எண்ணுகிறது. புலம்பதிந்து வாழும் இந்நான்கு மக்களும் இதற்கான குடைநிழல் அமைப்பொன்றை உருவாக்கி உரையாடலைத் தொடர்வது சமகாலத்தின் உடன் தேவை.

Tamil News