மாவீரர் மாதத்தில் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை உறுதிப்படுத்த தேசமாக இணைவோம் | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 208

மாவீரர் மாதத்தில் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை
உறுதிப்படுத்த தேசமாக இணைவோம்

ஈழத்தமிழர் மாவீரர் மாதம் ஆரம்பமாகி மாவீரர் வாரத்தை நோக்கி முப்பத்து மூன்றாவது ஆண்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஈழத்தமிழரின் தலைமைத்துவத்தை விடுதலைத் தலைமைத்துவமாக ஈழத்தமிழர் வரலாற்றில் வெளிப்படுத்திய தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் 26.11.1954. ஈழத்தமிழர்களின் இறைமைத்துவம் மாவீரர் நாளாக தாயகத்தின் தேசிய நாளாக கட்டமைவுற்ற நாள் 27.11.1989. ஒவ்வொரு ஆண்டிலும் இவ்விருநாட்களும் தேசத்தின் தலைமைத்துவம் மக்களின் இறைமையை உறுதி செய்ய வேண்டும் என்பதையும், வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இலங்கைத் தீவில் தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டதாக உள்ள ஈழத்தமிழரின் இறைமைத்துவம் உயிரிலும் மேலாக ஒவ்வொரு ஈழத்தமிழராலும் போற்றப்பட வேண்டும் என்பதையும் ஈழத்தமிழர் ஒவ்வொருவருக்கும் நெஞ்சிருத்துகின்றன.
அவ்வகையில் இவ்வாண்டு ஈழத்தமிழர்களின் இறைமையின் அடிப்படையில் அவர்களின் அரசியல் உரிமைகளை அனைத்துலக நாடுகள் அமைப்புக்கள் வழி தாயகத்தில் மீள் உறுதிப்படுத்தி, ரணிலின் ஒருநாடு ஓருசட்ட புதிய அரசியலமைப்பிலிருந்து பாதுகாத்தல் மாவீரர் நாளுக்கான முக்கிய செயற்திட்டமாகவுள்ளது. அவ்வாறே சிறிலங்காவின் 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்புக்கான தண்டனை நீதியையும் பரிகாரநீதியையும் அனைத்துலக சட்டங்களின் வழி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொடுக்க மாறா உறுதியுடன் தாயக மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர்கள் உறுதிபூண்டு, ஈழத்தமிழர்களின் தலைமைத்துவத்தை இறைமைத்துவத்தை உறுதிப்படுத்தத் தேசமாக இணைந்து எழும் நாளாகவும் இவ்வாண்டுத் தேசிய மாவீரர் நாள் அமைகிறது.
இவ்விரண்டு இலக்குகளையும் அடைவதற்கு ஒரே வழி ஈழத்தமிழர்களின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் முன்னிலைப்படுத்திய ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகளின் குடைநிழல் பொதுக்கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதேயாகும். இன்று ஈழத்தமிழர்களின் தேசியப் பிரச்சினை அவர்களின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் உலகம் உணரவைத்தல் என்பதாகவுள்ளது. இதனை பொதுப்புள்ளியாக வைத்து இக்குடைநிழல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டாலே ஈழத்தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் அரைநூற்றாண்டாக இனங்காணக்கூடிய அச்சுறுத்தலை அளித்து வரும் சிறிலங்காவின் அரசியலமைப்பே ஈழத்தமிழர் இனஅழிப்பினைச் சிறிலங்கா நியாயப்படுத்துவதற்கான தேசிய பாதுகாப்பு என்ற சட்டத்தகுதியையும் நாட்டின் இறைமையைப் பேணல் என்ற அனைத்துலகச் சட்டத் தகுதியையும் அளித்து வருகிறது என்ற உண்மை தெளிவாகும். இதன்வழி ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி உரிமையினைச் சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாத சமகால வரலாற்றினை இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் உறுதி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சிறிலங்காவின் ஈழத்தமிழர் இறைமை ஆக்கிரமிப்பை மீறி ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை அவர்களே நிர்ணயிக்க அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் உதவ முடியும். அதனை விடுத்து சிறிலங்கா அரசாங்கம் தமக்கான தீர்வை வழங்கும் அமைப்பாக இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பாகச் சம்பந்தன் தலைமையிலான ஈழத்தமிழ்த்தலைமைகள் உலகநாடுகளுக்கும் உலக அமைப்புக்களுக்கும் நம்பிக்கை அளிப்பதே கடந்த 13 ஆண்டுகளாக ஈழத்தமிழர்களின் தலைமைத்துவ இறைமைத்துவ இழப்புக்கான அரசியல் காரணியாக உள்ளது.
மேலும், இவ்வாண்டில் ரணில் விக்கிமசிங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரசாங்கம் மாவீரர் நாளை இறந்தவர்களை நினைவேந்தல் செய்யும் நாள் என்னும் வரலாற்றுத் திரிபுவாதத்தை வெளிப்படுத்தி இறந்தவர்களை நினைவுகூரத் தடையில்லை. ஆனால் இறந்தவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் என்ற அடையாளம் இல்லாத வகையில் அது இடம்பெற்றாலே சட்ட அனுமதி வழங்கப்படும் என்ற அப்பட்டமான வரலாற்றுத் திரிபுவாதத்தை மிகமோசமான மனித உரிமை மீறலை முன்நிபந்தனையாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மாவீரர் நாள் இறந்தவர்களை நினைவேந்தல் செய்யும் நாளல்ல ஈழத்தமிழரின் இறைமையை வெளிப்படுத்தும் தேசிய நாள் என்ற உண்மையை உலக இனமாக உள்ள ஈழத்தமிழினம் உலகெங்கும் உறுதி செய்ய தேசமாக இவ்வாண்டு மாவீரர் நாளில் திரெண்டெழ வேண்டும்.
இவ்வாண்டு மாவீரர் மாதத்தில், இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலைவழக்கில் வழங்கப்பட்ட தண்டனைக்காலம் நிறைவுற்றதன் பின்னரும் காரணமின்றி மிகமிக நீண்டகாலம் முப்பதாண்டுகள் நீதியிழப்புக்கு உள்ளான நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபேர்ட் பயஸ் ஆகிய ஆறுபேரும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நவம்பர் 11இல் விடுதலை செய்யப்பட்ட வரலாறும் பதிவாகியுள்ளது. பேரறிவாளன் வழக்கில் அவரின் விடுதலைக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு இவர்களுக்கும் பொருந்தும் என்ற சட்டத் தகுதியைச் சிறையில் இவர்களின் திருப்திகரமான நன்னடத்தையும்,, சிறையில் கல்வி கற்றது, பரோல் விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்தது போன்ற இவர்களின் நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளதாலும், தமிழக ஆளுநர் இவர்களைத் தமிழக மாநில அரசாங்கம் 2018இல் சட்டசபையில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விடுவித்தும் அந்த உத்தரவில் கையெழுத்திடாது காலதாமதம் செய்து நீதியிழப்பை இவர்களுக்கு ஏற்படுத்தி உள்ளதாலும், இந்திய உச்ச நீதி மன்றம் தனது மீயுயர் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்துள்ளது. இது தமிழர்கள் எல்லோராலும் இந்திய உச்ச நீதிமன்றம் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாத்த நீதியின் வெற்றியாகப் போற்றப்படுகிறது. இதற்காக உழைத்த தமிழக அரசாங்கத்தினருக்கும் கட்சிகளுக்கும் சட்டத்தரணிகள் மற்றும் அனைத்து முயற்சியாளர்களுக்கும் நன்றி கூறுவதில் இலக்கும் இணைந்து கொள்ளும் அதே வேளையில் இந்தியா ஈழத்தமிழர்களின் இருப்பின் இறைமையின் அடிப்படையில் அவர்களுக்கான கண்ணியமான வாழ்வை உறுதி செய்து ஈழத்தமிழர்களுக்குத் தாயகத்தில் தொடரும் நீதியிழப்பில் இருந்து அவர்கள் விடுபடவும் உதவ வேண்டும் என்பதையும் வேண்டுகோளாக வைக்கவும் விரும்புகிறது. விடுதலையானவர்களில் சாந்தன், சிறிகரன் என்ற முருகன், ரொபேர்ட்பயஸ், ஜெயக்குமார் ஈழத்தமிழர்களாக உள்ளதால் இவர்களின் வாழ்வியல் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் உலகஇனமாக உள்ள ஈழத்தமிழர்கள் உதவிடும் பொறுப்புள்ளவர்களாக உள்ளனர் என்பதையும் இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

Tamil News