அனைத்துலக ஈழத்தமிழர் அரசியல் சமுகம் அமைக்கப்படல் காலத்தின் தேவையாகவுள்ளது | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு இதழ் 203

அனைத்துலக ஈழத்தமிழர் அரசியல் சமுகம்
அமைக்கப்படல் காலத்தின் தேவையாகவுள்ளது

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் குடிகளாக வாழும் ஐரோப்பாவில் இவ்வாரத்தில் அதன் அரசியல் தலைவர்களை உள்ளடக்கிய ஐரோப்பிய அரசியல் சமுகம் அதனுடைய முதலாவது அமர்வை செக் குடியரசின் பிராக்குவே நகரில் அக்டோபர் 7 இல் நடாத்தியது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஐரோப்பியர் நலன் பேணு பொது அமைப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிரித்தானியாவும் நட்புநிலையில் கலந்து கொண்டு உருவாகியுள்ள இந்த ஐரோப்பிய அரசியல் சமுகம் ஐரோப்பாவின் முக்கிய சமகாலப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆராயும் பொது அமைப்பாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளது.
மேற்குலகத்தினரின் மொழியில் உக்கிரேனில் ரஸ்யாவின் யுத்தம், என்னும் கிரெம்ளினின் பொறுப்பற்ற விரிவாக்கப் படிமுறைகளான 01. தேசிய அணிதிரட்டல் பரப்புரை 02. போலியான வற்புறுத்தல் குடியொப்பம் 03. சுட்டவிரோதமாக உக்கிரேனின் எல்லைகளைத் தன்னோடு இணைத்தல் என்பனவற்றை எவ்வாறு எதிர்கொண்டு உக்கிரேனுக்கு உறுதியான பொருளாதார, இராணுவ, அரசியல், நிதி ஆதரவுகளை ஐரோப்பிய நாடுகள் அளிக்கலாம் என்பது குறித்தும், அதன்வழி எவ்வாறு ஐரோப்பாவின் உட்கட்டுமானத்திற்கான நெருக்கடிகளை எதிர் கொள்வது எனவும் இந்த அரசியல் சமுகம் ஆராய்ந்துள்ளது.
அவ்வாறே ஐரோப்பாவில் சக்தி வளங்களுக்கு மிகப்பெரிய விலையேற்றம் ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் அவற்றின் வழங்கல்களை உறுதி செய்து தாங்கக்கூடிய விலையில் வீடுகளும் வர்த்தகநிறுவனங்களும் அதனைப் பயன்பாட்டுக்குப் பெறுவதற்கு ஐரோப்பியரின் சிறந்த ஒத்துழைப்பை உருவாக்குவதும், பொருளாதாரத்தை வளர்த்து வேலைவாய்ப்புக்களைப் பெருக்கி ஏற்பட்டுள்ள விலைவாசி ஏற்றத்தை எதிர் கொண்டு மக்கள் வாழ்வதற்கான ஒன்றுபட்ட மனநிலையை உருவாக்கி பொதுவான அக்கறைகளைப் பாதுகாத்து நலிந்த நிலையில் உள்ளவர்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என ஆராய்ந்து கொள்கைகளை உருவாக்கவும், ஐரோப்பிய அரசியல் சமுகத்தின் பொதுக்கருத்துக்கோளத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் இவற்றை எதிர் கொள்வதும், இந்த ஐரோப்பிய அரசியல் சமுகத்தின் நோக்காகவும் போக்காகவும் உள்ளது.
உலக வரலாற்றில் பலநாடுகளில் வாழும் மக்களுக்குப் பொதுவான தேவைகள் தோன்றும் பொழுது பலநாடுகளில் வாழும் மக்களை நாடுகளின் அரசியலுக்கு அப்பாற்பட்ட முறைமையில் ஒன்றிணைக்கின்ற மக்கள் சமுக இணைப்புக்கள் தோன்றுவது இயல்பான ஒன்றாகவே உள்ளது.
இந்த வகையில் ஈழத்தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே நிர்ணயிக்க வேண்டிய அரசற்ற தேசமக்களாக 22.05. 1972 முதல் இன்று வரை சிறிலங்காப் படைகளின் இனங்காணக் கூடிய அச்சத்திற்கு முகங்கொடுத்து உறுதியுடன் வாழ்ந்து வரும் நிலையில் அதிலும் குறிப்பாக 23.07.1983 முதல் இன்று வரை உலகின் பல முக்கிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து அரசியல் புகலிடம் கோரிப் பெற்று புலம்பதிந்து அந்நாடுகளின் குடிமக்களாகவே அந்நாடுகளின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக வாழ்வுக்குத் தங்களின் உழைப்பை உறுதியுடன் நல்கி வரும் உலக ஈழத்தமிழர்கள் சமுகம் என்ற அரசியல் சமுகத்தைத் தோற்றுவித்து வாழும் நிலையில், தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களையும் இணைத்த “ஈழத்தமிழர் அரசியல் சமுகம்” அதனை உருவாக்க வேண்டிய பொறுப்புள்ளவர்களாக உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 2015 முதல் கடந்த ஏழு ஆண்டுகளாக 21 அமர்வுகளில் இலங்கைத் தீவின் இன்றைய ஆட்சியாளர்களான சிறிலங்கா அரசாங்கத்தினரை பொறுப்புக்கூறவைத்தல், மனித உரிமைகளைப் பேணவைத்தல், சுதந்திரமான தேர்தல் வழியிலான சனநாயக அடிப்படையில் நல்லாட்சியை முன்னேற்றுதல் என்கிற நோக்கைச் செயற்படுத்த முயன்று வருகிறது. சிறிலங்காவில் மனித உரிமை வன்முறைகள், யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் செய்தோரை தனிப்பட்ட நிலையில் அனைத்துலகச் சட்டங்களின் கீழ் விசாரிப்பதற்கு அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்கள் மேலான வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான சாட்சியங்களைப் பதியும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அதிகாரங்களை வழங்கும் தீர்மானங்களாக 30/1. 46/1 தீர்மானங்களை நிறைவேற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 2022ம் ஆண்டு அமர்வில் 51/1 தீர்மானத்தை 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றியுள்ளது. இம்முறைத் தீர்மானத்தில் பொருளாதாரக் குற்றங்களும் அனைத்துலகச் சட்டங்களுக்கு ஏற்ப விசாரிக்கப்பட வேண்டும் என்கிற விரிவாக்கம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. இதன்வழி சிறிலங்காவின் பொறிமுறைக்குள்ளேயே அதனை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையக முயற்சிகள் எல்லைப்படுத்தப்படுகின்றன. பிரித்தானியா 18 மாதங்களை இதற்கான கால எல்லையாக கட்டமைத்த தன்மையை மாற்றி இரண்டு வருடங்களைக் கால எல்லையாக விரிவுபடுத்திச் சிறிலங்காவுடனான நட்பை உறுதி செய்துள்ளது. இந்தியா நடுநிலைமை வகித்து தனது 13வது திருத்தத்தையே மீளவும் மீளவும் உலகநாடுகளும் உலக அமைப்புக்களும் தீர்வாக ஏற்க வேண்டுமென்பதை வலியுறுத்தி அவை ஈழத்தமிழர்களின் வெளியகத் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழர்க்கான ஏற்புடைய தீர்வுகளை வழங்காது சிறிலங்காவின் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டையும் காப்பாற்றிக் கொடுத்துள்ளது. சீனா தனது தூதுவரை யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்களுக்கு 82 பேருக்கு மாதம் 5000 ரூபா புலமைப்பரில் வழங்க 4.3 மில்லியன் ரூபாக்கள் வழங்கியும் 5 முனைவர்கள் சீனப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறவும் உதவி தமிழருடன் உறவாடலை நடாத்தும் அதே வேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கான முழுஅளவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய இரட்டை நிலைப்பாட்டு அரசியல் எதார்த்த நிலையில் ஈழத்தமிழர்கள் தங்களுக்கான அனைத்துலக அரசியல் சமுகம் ஒன்றை உடன் உருவாக்கி உழைத்தால் மட்டுமே ஈழத்தமிழரின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளைப் பேண முடியும் என்பதே இலக்கின் எண்ணம்.

ஆசிரியர்

Tamil News