சிலை விவகாரம்-யாழ்.நீதிமன்ற சூழலில் காவல்துறை குவிப்பு

சிலை விவகாரம் - யாழ்.நீதிமன்ற சூழலில் பொலிஸார் குவிப்பு - pathivu

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மன் சிலையை அகற்ற காவல்துறையினரால்  முன் வைக்கப்பட்ட கோரிக்கை இன்று (18) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் நீதிமன்ற சூழலில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நாகபூசணி அம்மன் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையினால் போக்குவரத்திற்கு இடையூறு எனவும், மதங்களுக்கு இடையில் முரண்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் உண்டு எனவும் அதனால் அந்த சிலையை அகற்ற நீதிமன்றில் அனுமதி கோரி இருந்தனர்.

அதனை அடுத்து நீதிமன்று, குறித்த சிலை தொடர்பில் உரிமை கோர கூடியவர்கள் எவரேனும் இருப்பின் இன்று செவ்வாய்க்கிழமை மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தது. அதன் பிரகாரம் இன்றைய தினம் சிலை தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், 30க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மன்றில் பிரசன்னம் ஆக்கினர்.

அதேவேளை அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், மூத்த சட்டத்தரணிகளான என். ஸ்ரீகாந்தா , வி. திருக்குமரன் உள்ளிட்ட பல சட்டத்தரணிகள் மன்றில் தோன்றினர்.

இந்நிலையில் நீதிமன்ற சூழலில் பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.