உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் -நீதி அமைச்சர் விஜேதாச

இனங்களுக்கிடையில் சிதைவடைந்திருக்கும் நல்லிணக்கத்தை மீள கட்டியெழுப்ப எடுக்கும் நடவடிக்கை மக்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கை அல்ல. மாறாக உளப்பூர்வமாகவே மேற்கொள்வதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன்  என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நீதி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்காத மற்றும் நீதியை நிலைநாட்டுவதில் தாமதம் ஏற்படும் நாடு என எமது நாட்டுக்கு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலை இருக்கும்போது முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு அது தடையாக இருக்கின்றது. அதனால் இந்த குற்றச்சாட்டுக்களில் இருந்து மீள்வதற்காக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த கொவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி உட்பட பல நிலைமைகள் காரணமாக நீதிமன்றங்களில் 11இலட்சம் வழக்குகள் குவிந்துள்ளதுடன் 26ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பது பாரிய நிலைமையாகும்.

மேலும் கடந்த காலங்களில் தலைதூக்கி இருந்த பொருளாதார பிரச்சினை காரணமாக அராஜக நிலையில் இருந்த நாட்டை பொறுபெடுப்பதற்கு யாரும் முன்வராத நிலைமையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஓரளவு ஆறுதலான சூழல் ஏற்பட்டு, நாடு ஸ்திர நிலைக்கு மீண்டு வந்துகொண்டிருக்கின்றது.

அத்துடன் நீதி கட்டமைப்பை புதுப்பிப்பதற்காக 22 புதிய சட்ட மறுசீரமைப்புகளுக்கு கடந்த 6மாதங்களுக்குள் அனுமதித்துக்கொண்டுள்ளோம். சட்டங்களை இயற்றுவதுபோல் அதனை செயற்படுத்துவதற்கும் குறித்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும். நாட்டின் தற்போதைய நிலைமை தாெடர்பில் ஆராய்ந்து பார்த்து சட்ட கட்டமைப்பை மாற்றியமைப்பதற்காக ஊழல் எதிர்ப்பு சட்டத்தை விரைவாக அனுமதித்துக்கொள்ள இருக்கின்றோம்.

அத்துடன் இனங்களுக்கிடையில் சிதைவடைந்துள்ள நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பாரிய பொறுப்பு நீதி அமைச்சுக்கு சாட்டப்பட்டிருக்கின்றது. இன ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது மக்களை ஏமாற்றுவதற்கு அல்ல.  மாறாக உளப்பூர்வமாகவே மேற்கொள்வதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மற்றும் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றார்.