நான் எப்போதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பேன்: இந்திய திரைப்பட நடன இயக்குனர் கலா மாஸ்ரர்

432 Views

தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பேன்

நான் எப்போதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என இந்திய திரைப்பட நடன இயக்குனர் கலா மாஸ்ரர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு வருகை தந்த அவர், வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (03) நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீண்ட காலத்திற்கு பின்னர் நான் சிறிலங்கா வந்துள்ளேன். நான் பல தடவை படப்பிடிப்புக்காக கொழும்பு வந்திருக்கின்றேன். படப்பிடிப்புக்கு சென்று அதனை முடித்து விட்டு மீண்டும் இந்தியா சென்று விடுவோம். முதல் தடவையாக நான் வவுனியா வந்துள்ளேன். என்னுடைய அதிக இரசிகர்கள் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் தான். நான் கனடா, இலண்டன் என பல இடங்களில் நடன வகுப்புக்கள் எடுக்கின்றேன். அங்கும் ஈழத் தமழர்களே அதிகம் வருகிறார்கள்.

இலங்கையில் இராமர், இராவணன் இருந்த இடங்கள் உள்ளன. அதனை பார்க்க வேண்டும் என்ற ஆசை. இலங்கை தமிழர்களுக்காகவும் எனது வகுப்புக்கள் இருக்கும். இலங்கை தமிழர்களுக்களிடம் நல்ல திறமை உள்ளது. லொஸ்லியா எல்லாம் இலங்கையில் இருந்து வந்து இந்தியாவில் பிரபல்யமாக உள்ளார். இதேபோல் கனடாவிலும் எனது மாணவர்கள் உள்ளனர். வயது வேறுபாடின்றி எல்லோரிடமும் ஒரு திறமை இருக்கிறது. சினிமாவைப் பொறுத்தவரை வயது ஒரு பிரச்சனையே கிடையாது. திறமை தான் முக்கியம். இலங்கை கலைஞர்களையும் இந்திய திரைப்பட துறைக்குள் உள்வாங்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்வேன்.

யுத்தம் காரணமாக இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டமை பற்றி எனக்கு நிறைய கதைகள் தெரியும். அவற்றை கேட்டு நான் வேதனையடைந்து இருக்கின்றேன். நேரில் பார்க்கும் போது சில இடங்களில் நிறைய கவலையாக இருந்தது. சில இடங்களில் நான் கண்ணீர் விட்டு அழுது கூட இருக்கின்றேன். இந்த உலகத்தில் எல்லோருக்கும் சுதந்திரம் உண்டு. யாரும் யாருக்கு அடிமை கிடையாது. கனடா, இலண்டன் என பல நாடுகளில் தமிழர்கள் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். அந்த நாடுகள் அதற்கு உரிமை கொடுத்துள்ளது. அப்படியிருக்கும் போது ஏன் இங்கு அப்படி கொடுக்க முடியாது? நான் எப்போதும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பேன்.

நான் கொழும்பு போகின்றேன், வவுனியா போகின்றேன் என்று சொன்ன போது எல்லோரும் அங்கு போறியா? பயமில்லையா என்றார்கள். ஆனால் எந்த பயமும் கிடையாது. நானும் கணவனும் மட்டுமே தனியாக வந்துள்ளோம். எல்லா இடத்தையும் பார்க்கின்றோம். இது இராமர், முருகன், இராவணன் வாழ்ந்த இடம். இங்கு பயமில்லாமல் வரலாம். எந்த இடத்திற்கும் செல்லலாம். இங்கு வாழும் மக்களை எல்லோரும் வந்து பார்க்க வேண்டும். அது ஒரு பாடம். இந்த மக்களுக்காக நாம் குரல் கொடுக்கனும் எனத் தெரிவித்தார்.
Tamil News

Leave a Reply