பாலநாதன் சதீஸ்
தம்பி வந்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை: அப்பா தம்பிக்காகப் போராடியே இறந்து விட்டார். நான் தம்பியை மீட்கக் கடைசி வரை போராடுவேன்.
தந்தையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றப் போராடும் மகள்
தன் மகனுக்கான நீதி கேட்டு தந்தை மரணித்து விட்டார். தாய் நோயுற்ற நிலையில் இருக்க தன் தம்பியினைத் தேடும் பயணத்தில் அக்கா! சாட்சியங்கள் உண்மையினை பேசுகின்றன. ஆனால் நீதி வழங்கத் தான் யாரும் இல்லை .
உள் நாட்டு யுத்தம் நிறைவடைந்து விட்டது. தற்போது நாட்டில் சமாதானமாம். மக்கள் எல்லாரும் சந்தோசமாய் நிம்மதியாக வாழ்கின்றார்களாம் என நாடெல்லாம் ஒரே பரவல் பேச்சு. ஆனால் உண்மையாகவே எம் தமிழ் மக்கள் சந்தோசமாக நிம்மதியாக இல்லை.
ஆயுதப்போர் முடிந்து விட்டது தான்; ஆனால் மக்கள் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட வடுக்கள் ரணங்களாய் தொடர்ந்து துரத்துகின்றது. கடந்த யுத்த காலத்தில் தந்தையை, மகளை, மகனை, சகோதரர்களை என தம் உறவுகளைத் தொலைத்துவிட்டும், பாதுகாப்புக் கருதி இராணுவத்தினரிடம் ஒப்படைத்து விட்டும் அவர்களின் வருகைக்காக 12 வருடங்களைக் கடந்தும் காத்திருக்கும் அந்த உறவுகளின் நிலையை யாராறிவார்.
கடந்த போர்க்காலத்தில் தன் உடன் பிறந்த சகோதரனைத் தொலைத்துவிட்டு அவனின் வருகைக்காக இன்னமும் வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டுவரும் போராட்டக் களத்தில் போராடிக்கொண்டு, தன் தம்பியின் வருகைக்காகக் காத்திருக்கும் உடன் பிறந்த சகோதரி தான் மகேந்திரன் சிவகாமி.
“எனது பெயர் மகேந்திரன் சிவகாமி. நான் வவுனியா கூமாங்குளத்தில் வசித்து வருகின்றேன். எனது தந்தையின் பெயர் சின்னச்சாமி நல்லதம்பி. எனக்கு இரு சகோதரர்கள் தான். அதில் ஒருவர் தான் நல்லதம்பி சசிநந்தன். இவர் தான் காணாமல் ஆக்கப்பட்டவர். என்னுடைய மற்றைய சகோதரி திருமணம் செய்தி்ட்டா. என்ரை அப்பா தான் தம்பியைத் தேடி வவுனியாவில் காணாமல் போனவர்கள் போராட்டம் ஆரம்பித்தில் இருந்து போராட்டக் களத்திலேயே இருந்து போராடினவர்.
ஆனால் தம்பியை மீட்க முதலே அப்பா திடீரென இறந்திட்டார். என்ரை அம்மாவுக்கும் வயது போய்ட்டுது. அவவும் தம்பி காணாமல் போனதில் இருந்து யோசிச்சு வருத்தம். என்ரை அப்பா சொல்லுவார் “தம்பிய வீட்ட மீட்டுகொண்டுவந்து விட்டிட்டு தான் தன் உயிர் போகும்” எண்டு. ஆனால் தம்பி பற்றி தகவல் ஒண்டுமே தெரியாமல் அப்பா இறந்திட்டார்.
தங்கடை மகனை பார்க்க வேணும் என்பது தான் என்ரை அப்பா அம்மாட கடைசி ஆசை. அதனால தான் நான் அப்பா இறந்தாலும் தம்பிய மீட்டெடுக்கணும் எண்டு போராடிக் கொண்டிருக்கின்றேன்.
2008 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 29 ஆம் திகதி வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்னால் வைத்துதான் என்ரை தம்பியை இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் காலை 7 மணியளவில் பிடிச்சுக் கொண்டு போன தகவல் தெரியவந்தது. பிறகு காவல் துறையினரிடம் ஒப்படைத்தவங்கள். நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து என்ரை தம்பி குற்றவாளி இல்லை என்று விட்டுவிட்டார்கள்.
வழக்கு முடிஞ்சு வரேக்க நீதிமன்ற வாசலிலேயே சிஐடி எண்டு சொல்லி ஐந்து பேர் வந்தாங்க. என்ரை தம்பியை எம் கண்முன்னுக்கே பிடிச்சிட்டு போனாங்க. எங்களால முடிஞ்சளவு அவனைக் காப்பற்றப் போராடியும் காப்பாற்ற முடியல. என்ரை தம்பி ஒரு குற்றமும் செய்யல. என்ரை தம்பிய எப்பிடியாவது மீட்கணும். இனியாவது நாங்கள் எல்லாரும் ஒன்றா சேர்ந்து நிம்மதியா வாழணும் எண்டதுதான் எங்கட ஆசை .
தம்பிட உடுப்பு, சைக்கிள் என அவன் பாவிச்ச பொருட்கள் எல்லாத்தையும் வைச்சிருக்கிறம். அவன்ர படத்த சாமிதட்டிலயே வைச்சு பாத்திட்டு இருக்கிறம். அப்பா அம்மாவை உழைச்சு பார்த்ததும் என்ரை தம்பி தான். அவன் இண்டைக்கோ, நாளைக்கோ வருவான் எண்டு தான் எல்லாரும் காத்துக்கொண்டு இருக்கிறம் . எப்பிடியாவது என்ரை தம்பிய கண்டுபிடிக்கணும்.
தம்பியைக் காணவில்லை எண்டு சொல்லி ரெட்குறோஸ் நிறுவனத்திலும், ஜனாதிபதி ஆணைக்குழுவிலும், வவுனியா வன்னி பிரதி காவல்துறை அதிபர் காரியாலயம் என எல்லா இடங்களிலேயும் முறைப்பாடு செய்தனாங்கள். ஆனாலும் அவன் எங்கே இருக்கிறான்? எப்பிடி இருக்கிறான்? எண்டு ஒரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. என்ரை தம்பி காணாமல் போகேக்க 25வயது. இப்போ அவனுக்கு 38 வயது 13 வருடம் ஆகீட்டுது. என்ரை தம்பிட தகவல் எதுவுமே தெரியல. எவ்வளவோ முறைப்பாடுகள் கொடுத்தும் யாருமே எந்தப் பதிலும் கூறவில்லை.
தம்பி காணாமல் போனதிலிருந்து என்ரை அப்பா அவனை மீட்க எல்லா வழிகளிலும் போராடினவர். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியல. அந்த வலியோட வவுனியாவில காணாமல் போனவர்களின் உறவுகள் போராட்டம் நடாத்தினபோது வெயில், மழை எண்டு பார்க்காமல் தொடர்ச்சியா போராட்டத்திற்கு போவார். ஆனால் போராடி கடைசில தம்பிய பார்க்காமல் 06.05.2020 ஆம் ஆண்டு இறந்திட்டார். அன்று தொடங்கி இன்றுவரை என்ரை தம்பிய தேடி நான் போராடிக்கொண்டிருக்கிறன்.
எங்களுக்கு எங்கட தம்பி வேணும். எப்படியாவது எங்கடை தம்பியை மீட்டுத் தாங்கோ. என்ரை அப்பாவால தான் தம்பிய பார்க்க முடியலை. என்ரை அம்மாவாவது கடைசியா தம்பிய பார்க்கணும் எப்படியாவது என்ரை தம்பிய மீட்டு தாங்கோ?” என தன் உடன் பிறந்த சகோதரன் பற்றி கூறிமுடித்தார் அந்த சகோதரி. இதுவரை அவன் எங்கே என தெரியாது பரிதவித்து நடு வீதியிலே கண்ணீருடன் காத்திருக்கும் அந்த சகோதரியின் நிலையை என்னவென்று சொல்வது?
இவர்களின் கண்ணீருக்கு நீதி எங்கே? இன்னும் பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோரும், கணவனைத் தொலைத்த மனைவிமார்கள், மனைவியைத் தொலைத்த கணவன்மார்கள், பெற்றோரை தொலைத்த பிள்ளைகள் என இன்றும் எத்தனை பேர் கண்ணீருடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இவர்களுக்கான நீதி எங்கே! இவர்களின் எதிர்பார்ப்பும் தவிடு பொடியாகித்தான் போகுமா?
கடத்தப்பட்டும், காணாமலாக்கப்பட்டும் தொலைந்து போன தம் உறவுகள் இருக்கின்றார்களா? இல்லையா? என தெரியாது. ஆனால் அவர்களுக்காக நாள் தோறும் வீதியிலே காத்திருக்கின்றார்கள் உறவுகள். இவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க யார் முன்வருவார்கள். இவர்கள் ரணங்கள் என்றுமே அழியப் போவதில்லை. இவர்களின் வலிகளுக்கு மருந்து போட யாரும் தயாராகவும் இல்லை.