மனிதாபிமான முறையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு; இலங்கையிடம் வலியுறுத்தியது இந்தியா

மனிதாபிமான அணுகுமுறையின் அடிப்படையில் இரு நாட்டு மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இலங்கை அதிகாரிகளிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் அது வலியுறுத்தியது.

மீன்பிடி தொடர்பான இந்திய-இலங்கை கூட்டு செயற்குழுவின் 5ஆவது கூட்டம் நேற்று முன் தினம் மெய்நிகர் வழி மூலம் இடம்பெற்றது. இதன்போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மீன்பிடிப் படகுகள் கைப்பற்றல் நடவடிக்கையின்போது உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட இலங்கை அதிகாரிகளை எச்சரிக்கையுடன் செயல்படுமாறு இந்திய தரப்பு இதன்போது கேட்டுக்கொண்டது.

இரு நாட்டு மீனவர்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு அந்தந்த அரசாங்கங்கள் வழங்கிய மிக உயர்ந்த முன்னுரிமையை இரு தரப்பினரும் இதன்போது மீண்டும் வலியுறுத்தினர்.

எந்தச் சூழ்நிலையிலும் பலாத்காரத்தைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது என்பதை இரு நாடுகளும் இதன்போது ஒப்புக்கொண்டன.

பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்வளம் தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான – தொடர்ச்சியான இரு தரப்பு ஒத்துழைப்பை இரு தரப்பினரும் இதன்போது ஆராய்ந்தனர்.

கூட்டு கடற்படை ரோந்து உட்பட, பாதுகாப்பான மற்றும் நிலையான மீன்பிடியைப் பராமரிக்க இரு அரசாங்கங்களும் மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு இரு தரப்பும் பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்டன.

ட்ரோலர்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்து இலங்கை தரப்பு இதன்போது தனது கவலைகளை எழுப்பியதுடன், வாழ்வாதார இழப்பைத் தணிக்க பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று இந்தியத் தரப்பு வலியுறுத்தியது.

Tamil News