பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் இலங்கை வருகை என்பன இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் Syed Mohsin Raza Naqvi, வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள அபிவிருத்திக்கான அமைச்சர் chaudhry Salik Hussain ஆகியோர் உள்ளிட்ட தூதுக்குழுவுடனான சந்திப்பு இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வருகைக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ததற்காக பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். டித்வா சூறாவளி உட்பட இலங்கை மக்கள் சிரமங்களை எதிர்கொண்ட போதெல்லாம் பாகிஸ்தான் இலங்கைக்கு அளித்த மனமார்ந்த ஆதரவை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் பாராட்டினார்.
பாகிஸ்தான் பிரதமருக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலின் பின்னரே, போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முடிவு செய்ததாக இதன்போது தெரிவித்த அமைச்சர் Syed Mohsin Raza Naqvi, அதற்காக பாகிஸ்தான் பிரதமர் சார்பாக ஜனாதிபதிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தினால் தமது கிரிக்கெட் அணி உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்ட சிநேகபூர்வமான விருந்தோம்பல் மற்றும் இலங்கை மக்களின் நட்புரீதியான வரவேற்பையும் அமைச்சர் மேலும் பாராட்டினார்.
இலங்கையுடனான உறவுகளை மேலும் வளர்த்து, பிராந்தியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒத்துழைப்புடன் செயற்படுவது பாகிஸ்தானின் நோக்கம் என்றும், அதன்போது இலங்கை வழங்கி வரும் ஆதரவைப் பாராட்டியதுடன், குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு, தொழிற் சந்தை மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான விடயங்கள் குறித்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பாகிஸ்தான் தூதுக்குழுவினர் மேலும் குறிப்பிட்டனர்.
தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோருடன் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் Mag.Gen.(R) Faheem UL Aziz, இலங்கைக்கான பாகிஸ்தான் துணை உயர் ஸ்தானிகர் Zunaira Latif, பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பிரதான செயற்பாட்டு அதிகாரி Sumair Ahamad Syed உள்ளிட்ட பாகிஸ்தான் பிரதிநிதிகள் குழுவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



