இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக நேற்றிரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள முன்னெச்சரிக்கையின் பிரகாரம், ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலுள்ள நீர் நிலைகளுக்கு அதிக மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்பாசன திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இதனால், குறித்த பகுதிகளில் நீர்நிலைகளை அண்மித்து தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையை அண்மித்த வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்க நிலைமையானது, பொத்துவில் பகுதியிலிருந்து சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இலங்கை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த தாழமுக்கமானது, எதிர்வரும் 24 மணி நேரத்தில் மேற்கு நோக்கி பயணித்து கிழக்கு கரையோர பகுதியை அண்மிக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இது எதிர்வரும் 12 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிடுகின்றது.
மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான காலி வரையான கரையோர பகுதிகளில் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டை சூழவுள்ள கரையோர பகுதிகளிலும் சில சந்தர்ப்பங்களில் இடைக்கிடை இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை அறிக்கை கூறுகின்றது.
கரையோர பகுதிகளில் காற்றின் வேகமானது 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், கடல் அலை 2.5 முதல் 3.5 மீட்டர் வரை உயர்ந்து, சற்று சீற்றத்துடன் காணப்படும் எனக் கூறப்படுகின்றது,



