இராணுவத்தினரை கண்டித்து, தமிழரசுக் கட்சி ஹர்த்தால் என்ற நிர்வாக முடக்க போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் 63வது படைப்பிரிவைச் சேர்ந்த சில சிப்பாய்களால், முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கு, இலங்கைத் தமிழரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, இலங்கை தமிழரசுக் கட்சி எழுதியுள்ள கடிதத்தில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – முத்தையன்கட்டு குளத்தில் கடந்த 9ஆம் திகதி 32 வயதான எதிர்மன்சிங்கம் கபில்ராஜ் என்ற பொதுமகன் சடலமாக மீட்கப்பட்டார். அவரும் மேலும் நான்கு பேரும் இராணுவ முகாமுக்கு வரவழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சில இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தடையற்ற விசாரணையை உறுதிசெய்து பொறுப்பானவர்களை பொறுப்புக்கூற வைக்குமாறும் ஜனாதிபதியை இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேவைக்கு அதிகமாகவுள்ள இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைக்குமாறும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் மூர்க்கத்தனமான செயற்பாடுகளுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிர்வாக முடக்கல் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.