ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

கணக்காய்வாளர் நாயகம் இன்றி நாடு இயங்கி வரும் பாரதூரமான நிலையைச் சுட்டிக்காட்டி, கோப் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடித்தில் நாட்டில் நிலவும் தற்போதைய பேரிடர் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு,கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி 06 முக்கிய விடயங்களை உள்ளடக்கிய கடிதத்தை ஜனாதிபதிக்கு அவர் சமர்ப்பித்துள்ளார். ‘டிட்வா’சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை புனரமைக்கும் பணிகளுக்காக தற்போது பெருமளவிலான நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான பாரிய நிதி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் கணக்காய்வாளர் நாயகத்தின் பதவி வெற்றிடமாக இருப்பது பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ‘X’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா, தற்போதைய இக்கட்டான நிலையில் நிதி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இந்த நியமனம் மிக முக்கியமானது என்று வலியுறுத்தியுள்ளார்.