அடுத்தடுத்து ஊடகங்களும் ஊடகவியலாளா்களும் இலக்கு வைக்கப்படுகின்றாா்கள். கொழும்பு அரசியலை கடந்த வாரம் பரபரப்பாக்கிக்கொண்டிருக்கும் செய்திகள் இவைதான். பௌத்த மதத்தை நிந்தனை செய்தாா்கள் என இரு சமூக ஊடகவியலாளா்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்கள். இருவருமே சமூகத்தில் மிகவும் பேசப்படுபவா்கள். தனிப்பட்ட சமூக ஊடகவியலாளா்கள், அரசாங்கத்தை விமா்சிப்பவா்கள் அவதானமாக இருக்க வேண்டிய நிா்ப்பந்தம் உருவாக்கப்பட்டிருப்பதாகவே தெரிகின்றது. இதன் பின்னி என்ன?
நாட்டின் பொருளாதார நிலை முன்னேற்றமடைந்துவருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஊடகங்கள் மீது மறைமுகமாக அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான உபாயங்களை அரசாங்கம் மிகவும் நுட்பமாக வகுத்துவருகின்றது. பொருளாதார நெருக்கடி பெருமளவுக்குத் தீா்ந்துவிட்டதாக ஒரு தோற்றப்பாடு காட்டப்படுகின்றபோதலும், அரசாங்கம் தாண்டிச் செல்ல வேண்டிய பிரதான தடைகள் இன்னும் இரண்டு இருக்கின்றன. அந்த இரண்டு தடைகளும் அரசாங்கத்தை உறுத்திக்கொண்டுள்ள நிலையில்தான், ஊடகங்களின் பக்கம் அரசின் கவனம் திரும்பியிருக்கின்றது.
அரசாங்கம் தாண்ட வேண்டிய தடைகளில் முதலாவது, ஐ.எம்.எப். முன்வைத்த நிபந்தனைகளில் பெரும்பாலானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அவற்றை நிறைவேற்றாமல், முழுஅளவிலான உதவியை ஐ.எம்.எப். அமைப்பிடமிருந்து எதிா்பாா்க்க முடியாது. இரண்டு – உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு இன்னும் செய்யப்படவில்லை. இதற்காக தம்மிடமுள்ள திட்டம் என்ன என்பதையும் அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை. இந்த இரண்டு விடயங்களையும் செயற்படுத்த முற்படும் போது மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படக்கூடும். அதனால்தான் அரசாங்கம் அவ்விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றது. ஆனால், இந்த இரண்டையும் தாண்டாமல் அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியாது என்பதை ஐ.எம்.எப். சொல்லியிருக்கின்றது.
மக்கள் மத்தியில் உருவாகக்கூடிய கொந்தளிப்பை கட்டுப்படுத்த வேண்டுமானால், ஊடகங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மக்கள் கிளா்ச்சியைத் துாண்டிவிடுவதில் சமூக ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் பிரதான பங்கை வகித்துள்ளன. கடந்த வருடம் “கோட்டா கோ கம” என்று ஆரம்பமான போராட்டத்திலும் ஊடகங்களின் பங்கு பிரதானமாக இருந்தது. இவற்றைக் கவனத்தில் எடுத்துதான் ரணில் விக்கிரமசிங்க அரசு, ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சில உபாயங்களை வகுத்திருப்பாகத் தெரிகின்றது.
பௌத்த மதத்தை நிந்தித்ததாக கூறி இரண்டு சமூக ஊடகவியலாளா்கள் கடந்த வாரம் அதிரடியாகக் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்கள். இதன் மூலம் சிங்கள – பௌத்த கடும் போக்காளா்களின் ஆதரவைத் தக்கவைக்க அரசாங்கம் முற்படுகின்றது. செய்திகளில் இதனை பெருமெடுப்பில் வெளிப்படுத்தி, இவ்வாறு சுயாதீனப் போக்கில் செயற்படும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது. ஊடகங்களுக்கு எதிராகக் கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ள கெடுபிடிகளை நியாயப்படுத்துவதற்கு, அவா்கள் பௌத்த மத நிந்தனைகளில் ஈடுபடுகின்றாா்கள் என்பதை காண்பிக்க அரசாங்கம் முற்படுகின்றது. அதற்காகத்தான் அந்தக் கைதுகளும், அவா்கள் தொடா்பாக புனையப்பட்ட செய்திகளும். இதன் பின்னணியில் முக்கியமான நகா்வு ஒன்றை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.
அதில் முக்கியமானது – இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பான அறிவித்தல் சில தினங்களுக்கு முன்னா் வெளியிடப்பட்டது. எதிா்பாா்ககப்பட்டதைப் போலவே, அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு எதிர்க் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளன. ஆனால், எதிா்க்கட்சிகளின் எதிா்ப்புக்களுக்கு மத்தியிலும், தாம் நினைத்ததை எவ்வாறு சாதிப்பது என்பது ரணிலுக்குத் தெரியும்.
இந்த ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவை அமைப்பதற்கான சட்ட வரைவு ஒன்றை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை உபகுழு தயாரித்திருக்கின்றது. இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பாக – அவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் பாரதூரமான விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. இந்த சட்டவரைவின் பிரகாரம் ஐவர் கொண்ட ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அமைக்கப்படும்.
ஊடகத்துறை அமைச்சின் செயலாளரும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளரும் இந்த ஆணைக்குழுவில் நியமிக்கப்படுவர். ஏனைய மூன்று உறுப்பினர்களை அரசமைப்பு பேரவையின் அனுமதியுடன் ஜனாதிபதி நியமிப்பார். இவர்களில் ஒருவரை தலைவர் பதவிக்கு நியமிக்கும் அதிகாரமும்
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இலத்திரனியல் ஊடகங்களின் செயல்பாடுகளுக்கு பாரதூரமான வகையில் அழுத்தம் கொடுக்கக்கூடிய விடயங்களும் ஆணைக்குழுவின் விடயதானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.தேசிய பாதுகாப்பு சட்டம், அமைதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒளிபரப்பு சேவைகள் முன்னெடுக்கப்படுவதை ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவே உறுதி செய்ய வேண்டியுள்ளது. தேசிய பொருளாதாரத்துக்கு அழுத்தம் ஏற்பாடாத வகையில், ஒளிபரப்பு சேவைகளை பேணிச் செல்வதும் ஆணைக்குழுவின் பொறுப்பாகும். மக்களுக்கு உண்மையான மற்றும் சரியான தகவல்கள் பெற்றுக்கொடுக்கப்படுவதையும் ஆணைக்குழு உறுதிப்படுத்த வேண்டும் என இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒளிபரப்பு அனுமதிப்பத்திரம் விநியோகிக்கும் அதிகாரத்தையும் இலத்திரனியல் ஒளிபரப்பு சேவை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தையும் புதிய ஆணைக்குழுவிற்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூக, கலாசார பெறுமதிகள் பாதுகாக்கப்படும் வகையில், மக்கள் மத்தியில் உளநல, ஆன்மீக பண்புகளை மேம்படுத்துவதற்காக ஆணைக்குழு இலத்திரனியல் ஊடகங்களுக்கான வழிகாட்டுதல்களை தயாரிக்க வேண்டியுள்ளது.
இதனைத் தவிர, அனுமதிப்பத்திரமுடைய ஒளிபரப்பாளர்களுடன் கலந்துரையாடி ஒழுக்கக்கோவை ஒன்றை தயாரிக்கும் அதிகாரமும் உத்தேச ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.முறைப்பாடு இருந்தாலும் – இல்லாவிட்டாலும் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பாக விசாரணை செய்யும் அதிகாரம் இந்த குழுவுக்கு வழங்கப்படவுள்ளது. மத, இன ரீதியிலான மோதல்களுக்கு காரணமாக அமையும், தேசிய பொருளாதாரத்துக்கு அழுத்தம் ஏற்படுத்தும் , தேசிய பாதுகாப்பில் தாக்கம் செலுத்தும் செயல்பாட்டை ஒளிபரப்பு அனுமதிப்பத்திரமுள்ள ஒருவர் மேற்கொண்டால், முறைப்பாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் விசாரணையை ஆரம்பிக்கும் அதிகாரம் விசாரணைக் குழுவுக்கு வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒளிபரப்பை தடை செய்வதற்கான அதிகாரமும் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிா்காலத்தில் இடம்பெறக்கூடிய போராட்டங்கள் மக்கள் கிளா்ச்சிகள் என்பவற்றை இலத்திரனியல் ஊடகங்கள் ஒளிபரப்புவதற்கு கட்டுப்பாடுகளைப் போடுவதுதான் இதன் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகின்றது. பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய, தேசிய பாதுகாப்பைப் பாதிக்கக்கூடிய விடயங்கள் என்ன என்பதை அரசாங்கமே தீா்மானிக்கப்போகின்றது. ஆக, ஊடக சுதந்திரத்துக்கு – கருத்துச் சுதந்திரத்துக்கு வைக்கப்படும் ஆப்பு இது.
இது குறித்து அமைச்சா் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து கேலிக்குரியது. “ஒளிபரப்பு அதிகாரசபை சட்டத்தை கொண்டுவருவதன் மூலம் ஊடகங்களையோ சமூக ஊடகங்களையோ கட்டுப்படுத்த முடியாது. மாறாக ஊடகங்கள் மேற்கொண்டு செல்லும் நடவடிக்கையை மேலும் சிறப்பாக கொண்டு செல்வதற்கு உதவும் வகையிலேயே இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டி ருக்கிறது” என்பதுதான் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் கருத்து. “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல அமைச்சரின் கருத்து அமைந்திருக்கின்றது.
உருவாகக்கூடிய எந்தவொரு கிளா்சியையும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனக் காட்டிக்கொள்வதும், அதற்கு ஊடகங்கள் துணை புரிவதைத் தடுப்பதும்தான் அரசாங்கத்தின் திட்டம். இதற்கு ஏற்றவகையிலான சட்டவரைபு ஒன்றை அமைச்சா் விஜயதாஸ ராஜபக்ஸ தனது மூளையைப் பிசைந்து தயாரித்திருக்கின்றாா். இம்மாத இறுதிக்குள் இதனைக் கொண்டுவருவதுதான் அரசாங்கத்தின் திட்டம். ஏற்கனவே பயங்கரவாத எதிா்ப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படவிருக்கின்றது. இவ்விரண்டும் நடைமுறைக்கு வந்தால், சா்வாதிகார ஆட்சிக்கு உதாரணமாக இலங்கை மாறிவிடும் என்பதுதான உண்மை!