GR குறியீட்டுக்குள் சிக்கும் 1750: ஜனாதிபதி – மனோ கணேசன் சந்திப்பு தீர்வு தருமா? : மருதன் ராம்

இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயில் தேயிலை மற்றும் ரப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்கள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. குறிப்பாக, மலையகத் தொழிலாளர்களின் உழைப்பில் தங்கியுள்ள இத்துறை, கடந்த சில வருடங்களாகப் பொருளாதார நெருக்கடிகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தற் போது மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் உள்நாட்டு எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள், இத் துறையை மீள முடியாத ஒரு சரிவை நோக்கித் தள்ளும் அச்சம் உருவாகியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் கார ணமாக உலக சந்தையில் எரிபொருள் விநியோகம் சீர் குலைந்துள்ளது. இதன் நேரடி விளைவாக, இலங்கையில் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட் டாயம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள QR குறியீட்டு முறைமை பொதுவான நுகர்வைக் கட்டுப்படுத்த உதவினாலும், பாரிய இயந்திரங்களை இயக்கும் தோட்டத் துறைக்கு இது போதுமானதாக இல்லை. தொழிற்துறை ரீதியான பாதிப்புகள் உள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தேயிலைத் தோட்டங்கள் மலைப் பாங்கான பகுதிகளில் அமைந்துள்ளதால், பறிக்கப்படும் கொழுந்துகளை தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்ல வாகனங்கள் அத்தியாவசியமானவை. எரிபொருள் தட்டுப்பாட்டினால் கொழுந்து கொண்டு செல்லப்படுவது தாமதமடையும் போது, தேயிலையின் தரம் குறைந்து சந்தை மதிப்பை இழக்க நேரிடுகிறது.
அதேநேரம் பெரும்பாலான தேயிலைத் தொழிற் சாலைகள் உலர்த்துதல் மற்றும் அரைத்தல் போன்ற பணிகளுக்கு டீசல் மற்றும் மின்சாரத்தையே நம்பியுள்ளன. மின்சாரத் தடையின் போது எரிபொருள் இல்லையெனில் முழு உற்பத்திச் சங்கிலியும் முடங்கிவிடும். தோட்டங் களுக்குத் தேவையான உரங்கள், கிருமிநாசினிகள் ஆகிய வற்றைக் கொண்டு செல்வதற்கும் எரிபொருள் அவசிய மாகும்.
இது தவிர பெருந்தோட்ட தொழில் துறையில் முதுகெலும்பாக திகழும் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்திலும் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் என்பது நேரடியான உழைப்புடன் மாத்திரமன்றி, தோட்டத்தின் வருமானத்துடனும் பிணைக்கப்பட்டுள்ளது. அண்மையில் அரசாங்கமும் பெருந்தோட்ட நிறுவனங்க ளும் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
400 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தில் 200 ரூபாய் அரசாங்கத்தின் வரவு செலவு கொடுப்பனவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சார்பில் வருகைக்கான கொடுப்பனவாக 200 ரூபாவும் என்ற அடிப்படையில் இணக்கப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் உற்பத்திச் செலவு அதிகரிப்பதாலும், போக்குவரத்து முடக்கத்தாலும் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கும் வேலை நாட்களைக் குறைக்கும் அச்சம் நிலவுகிறது. இது தொழிலாளர்களின் மாத வருமானத்தைப் பெருமளவு பாதிக்கிறது.
அரசு  நிறுவனங்களில்  ஒவ்வொரு புதன்கிழமை யும் விடுமுறை தினமாக அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தற்போது நாளாந்தம் தொழிலில் ஈடுபட்டு வரு கின்றனர். எவ்வாறாயினும் தற்போதைய எரிபொருள் கட்டுப்பாடு அவர்களின் வேலை நாட்களில் தாக்கம் செலுத்துமாயின் அது நேரடியாக சம்பளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவ்வாறு ஏற்படுமாயின் அண்மையில் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு அந்த மக்களை சென்று அடைவதில் பாதிப்பு ஏற்படும்.
அதேநேரம் எரிபொருள் இல்லாததால் கொழுந்து சேகரிக்கும் லொறிகள் வராத போது, தொழிலாளர்கள் நீண்ட தூரம் சுமை தூக்கிச் செல்ல வேண்டியுள்ளது. இது அவர்களின் உடல் நலத்தைப் பாதிப்பதோடு, மேலதிக கொழுந்து பறிப்பதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
ஏற்கனவே குறைந்த சம்பளத்தைப் பெறும் மலையகத் தொழிலாளர்களுக்கு, தற்போதைய சம்ப ளம் அவர்களின் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. இவ்வாறான சூழலுக்கு மத்தியில் அரசியல் நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் ஜனாதிபதி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணே சன் உள்ளிட்ட தரப்பினருக்கு இடையிலான சந்திப்பு இடம் பெறவுள்ளது. மலையக மக்களின் பிரச்சினைகள் வெறும் பொருளாதாரப் பிரச்சினைகளாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியான அழுத்தங்களாகவும் மாறியுள்ளன.
இந்தச் சூழலில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சமீபத்திய தொலைபேசி உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது. ஜனாதிபதி தனது அழைப்புகளுக்குப் பதி லளிப்பதில்லை என மனோ கணேசன் பகிரங்கமாகத் தெரிவித்தமை, மலையக மக்களின் கோரிக்கைகள் புறக் கணிக்கப்படுகின்றனவோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அடுத்த வாரம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூதுக்குழுவைச் சந்திக்க இணங்கியுள்ளார். இதற்கிடையே அவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் உடன் தொலைபேசியிலும் உரையாடியதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது, QR முறைமையின் கீழ் தோட்டத் துறைக்கு எரிபொருள் வழங்குவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை நீக்கப்பட வேண்டும் அல்லது நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பள அதிகரிப்பு தொடர்பான இழுபறிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை போன்ற விடயங்கள் குறித்தும் விரிவாகப் பேசப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் தோட்டத் துறைக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறினாலும், அது நடைமுறையில் சாத்தியமாக வேண்டும். தேயிலைத் தொழிற்சாலைகளுக்குத் தேவை யான எரிபொருளைத் தடையின்றி வழங்க விசேட ஒதுக்கீட்டு முறையை சரியான பராமரிப்புடன் உருவாக்க வேண்டும். விசேட ஒதுக்கீட்டு முறை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உருவாகியுள்ள நீண்ட வரிசை அதற்கான சாத்தியம் குறித்த கேள்வியை எழுப்புகிறது.
எனவே சம்பளப் பிரச்சினையில் இடைக்காலத் தீர்வாக எரிபொருள் நிவாரணக் கொடுப்பனவுகளைத் தொழிலாளர்களுக்கு வழங்க நிர்வாகங்களை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் மலையக அரசியல் தரப்பினால் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் மனோ கணேசன் தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போது சாதகமான தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்க வேண்டு மாயின், அதன் முதுகெலும்பாக இருக்கும் பெருந்தோட்டத் துறை பாதுகாக்கப்பட வேண்டும்.
எரிபொருள் தட்டுப்பாடு என்பது தற்காலிகப் பிரச்சினையாகத் தோன்றினாலும், அது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திலும் தேசிய வருமானத்தி லும் பாரிய வடுக்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஜனாதிபதி மற்றும் மலையகத் தலைமைகளுக்கு இடையிலான எதிர்வரும் சந்திப்பு, வெறும் பேச்சுவார்த்தையாக இன்றி, செயலில் இறங்கும் ஒரு மாற்றமாக அமைய வேண்டும் என்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பாகும்.