பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கத்தின் இரட்டைவேட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. பெரிய அளவில் பிரசாரம் செய்யப்படுகின்றதே தவிர, நடைமுறையில் எதுவும் பயனுள்ளதாகத் தெரியவில்லை. சிங்கள மக்களைத் தவறாக வழிநடத்தி, தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்த நிலைமைகளில் சிறிய மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. இந்த மாற்றத்தின் பின்னரும்கூட சுய அரசியல் இலாப நோக்கிலான கபடத்தனமான அரசியல் செயற்பாடுகளுக்கு முடிவேற்பட்டதாகத் தெரியவில்லை. அந்தப் போக்கில் இருந்து பேரின அரசியல்வாதிகள் தடம் மாறுவதாகவும் தெரியவில்லை.
அரசியல் இலாபத்திற்கும் அதிகாரப் பேராசைக்கும் இனவாத வெறியூட்டி சிங்கள மக்களை உசுப்பேற்றி, அதில் அரசியல் குளிர்காய்ந்த ஆட்சியாளர்களுக்கு அரகலய – போராட்டக்காரர்கள் சரியான பாடம் புகட்டினர். பொருளதார நெருக்கடியினால் எழுந்த பிரச்சினைகளின் தாக்கத்தில் உயிர்ப்பு பெற்ற சிங்கள மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஏமாற்றத்தின் விளைவாக தன்னெழுச்சி பெற்று கொதித்தெழுந்த மக்கள் பேரலைக்கு முகம் கொடுக்க முடியாத ஜனாதிபதியும் பிரதமருமாகிய ராஜபக்ச சகோதரர்கள் பதவிகளைத் துறந்தார்கள். கோத்ட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டே ஓடித்தப்பினார்.
இந்த மக்கள் எழுச்சியின் மூலம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் பிரசார அரசியல் போக்கிலேயே சென்று கொண்டிரக்கின்றது. கடன் தொல்லையில் இருந்தும் வங்குரோத்து நிலையில் இருந்தும் நாட்டை மீட்டெடுக்கப் போவதாக சூளுரைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலில் அகலக் கால்வைத்து முனைப்பாகச் செயற்பட முற்பட்டிருக்கின்றார். அவருடைய அரசியல் அகலக்கால் வெளிப்படுத்துவதைப் போன்று பெரிய வெற்றியை ஈட்டித் தரும் என்று கூறுவதற்கில்லை.
ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கூட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளை ஆதரித்து வாக்களித்த அதே அரசியல்வாதிகளாகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே கூட்டப்பட்ட அதிகாரங்களைக் குறைப்பதற்கும் பின்னர் மீண்டும் அவற்றைக் கூட்டுவதற்கும் வாக்களித்திருந்தார்கள். அதே அரசியல்வாதிகளே ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் வேறு நோக்கங்களுக்காகவும் கொண்டு வரப்பட்ட 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள்.
இது, நாட்டை ஆள்கின்ற அரசியல்வாதிகளின் அப்பட்டமான சுய அரசியல் இலாப நோக்கத்தையும் அதிகாரப் பேராசையையும் வெளிப்படுத்துவனவாகவே இருக்கின்றது. மக்களின் நலன்களை மேம்படுத்தவும் நாட்டை முன்னோக்கி முன்னேற்றிச் செல்வதற்குரிய செயற்பாடாகத் தெரியவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சூட்டோடு சூடாக அரசியல் மாற்றத்திற்கு வித்திட்டிருந்த தன்னெழுச்சி பெற்ற போராட்டங்களை முன்னெடுத்தவர்களை அதிகாரப் பிடிகொண்டு அடக்கினார். அவரது நீண்டகால ஜனாதிபதி பதவி ஆசையைப் பூர்த்தி செய்வதற்கு கோட்டாபய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருந்த போராட்டமே உந்து சக்தியாக அமைந்திருந்தது. ஆனால் அந்தப் போராட்டத்தை அதிகார பலம் கொண்டு அவர் அடக்கினார். அதன் மூலம் மக்கள் அனைவரும் தனது பிடியின் கீழ் அடங்கி இருக்க வேண்டும் என்ற அதிகார மேலாண்மையை அவர் புலப்படுத்தி இருக்கின்றார்.
பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டிருந்த எரிபொருள் பற்றாக்குறை உணவுப் பொருள் பற்றாக்குறை போன்றவற்றில் அவர் சிறு தளர்வை ஏற்படுத்தி உள்ளார். அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் பொருட்களின் விலையேற்றம், அதிகரிக்கப்பட்டுள்ள வரிச்சுமைகள், கட்டுப்பாடின்றி வீங்கிச் செல்கின்ற பணவீக்கம் என்பவற்றைக் கட்டுப்படுத்துவதில் அவர் இன்னும் வெற்றி காணவில்லை. சிறிய அளவில்கூட முன்னேற்றம் காணவில்லை.
இதற்கிடையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற பாரிய முக்கியத்துவம் மிக்க நடவடிக்கைகளிலும் அவர் தீவிர கவனம் செலுத்தியிருப்பதாகக் காட்டியிருக்கின்றார். அரசாங்கத் தரப்பினால் கொண்டு வரப்படுகின்ற – 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் உள்ளிட்ட தீரமானங்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு கிட்டியுள்ள போதிலும், நாட்டில் அரசியல் உறுதித்தன்மை இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.
கடன் சுமைகளும், கட்டுப்படுத்த முடியாமல் எகிறிச் செல்கின்ற பண வீக்கமும் நாட்டின் பொருளதார உறுதிப்பாட்டைக் குலைத்திருக்கின்றன. பொருளாதார நிலைமையை உறுதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ள போதிலும், அந்த நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் அரசு நிலைதடுமாறி நிற்கின்றது.
அதேவேளை, மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதிலும், பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றுவதிலும், ஜனநாயத்தை முறையாகப் பேணுவதிலும் அரசாங்கம் இன்னும் முன்னேற்றத்தைக் காட்டவில்லை. இதனால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களினதும் இலங்கைக்கான உதவிகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜனாதிபதி அகலக்கால் வைத்து பல்வேறு விடயங்களில் நாட்டு மக்களினதும், சர்வதேசத்தினதும் நன்மதிப்பைப் பெறுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றியளிக்குமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.
குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் (ஓ.எம்.பி), இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பவற்றின் செயற்பாடுகளை முன்னேற்றகரமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கவில்லை. அவர்கள் எதிர்பார்க்கின்ற வகையில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை அந்த முயற்சிகள் கொண்டிருக்கவில்லை. இதனால் அவற்றுக்கு எதிரான போராட்டங்களே எதிர்வினையாக கிளர்ந்திருக்கின்றன.
காணாமல் போனோருக்கான அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் என்பவற்றின் நடவடிக்கைகளுக்கு உந்து சக்தியாக காணாமல் போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழு அமைந்திருக்கின்றது. ஆனால் அந்த ஆணைக்குழு முன்னிலையில் தோன்றி சாட்சியமளிக்க முடியாது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்கள். அந்த ஆணைக்குழுவின் அமர்வுகைளயும் அவர்கள் புறக்கணித்துள்ளார்கள். அத்துடன் இழப்பீடாக 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பையும் அவர்கள் உதாசீனம் செய்துள்ளார்கள். தங்களுக்கு இழப்பீட்டுப் பணம் தேவையில்லை. நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையே அவர்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள்.
அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதங்களை வவுனியவைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் எரியூட்டியிருக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரியாகிய டொக் ஸொனெக்கிடம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் (ஓ.எம்.பி) இயக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு வடக்கு கிழக்குப் பிரதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்கள்.
பொறுப்பு கூறும் கடப்பாட்டை நிறைவு செய்வதற்கு உள்ளகப் பொறிமுறையின் கீழ் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக எடுக்கப்படுகின்றது என சர்வதேசத்துக்குக் காண்பிக்கவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கின்றது. ஆனால் அதற்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அரசின் முயற்சிகளை ஆட்டம் காணச் செய்துள்ளது என்றே கூற வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்குத் தீர்வு காண்பதற்காக அதற்கென அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தின் (ஓ.எம்.பி) செயற்பாடுகளுக்கு அரசு ஊக்கமளித்திருக்கின்றது. ஆனால் அந்த அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுந்தல பாதிக்கப்பட்டவர்களை சீற்றமடையச் செய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், (இராணுவத்திடம்) சரணடைந்து காணாமல் போனவர்கள் என்று எவரும் கிடையாது எனக் கூறியிருக்கின்றார். அதற்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ள அவர் காணாமல் ஆக்கப்பட்டோரில் பெரும்பாலானவர்களை எல்ரீரீயினரே கடத்திச் சென்றனர் என்றும் ஏனைய குழுக்களும் அவர்களைக் கடத்திச் சென்றிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இராணுவத்திடம் விடுதலைப்புலி உறுப்பினர்களே சரணடைந்தனர். அதுவும் யுத்த முடிவில் பாதுகாப்பளிக்கப்படும். பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவார்கள் என அரசு அளித்த உத்தரவாதத்துக்கமைவாகவே அவர்கள் சரணடைந்தனர். இந்தச் சம்பவம் இரகசியமாக நடைபெறவில்லை. பல்லாயிரக் கணக்கான மக்கள் முன்னிலையில் அவர்களின் கண்முன்னால்தான் நடைபெற்றது. குடும்பம் குடும்பமாக வந்தவர்கள் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்தார்கள். இதற்கு ஏகப்பட்ட சாட்சிகள் இருக்கின்றன.
இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்குகளில், வவுனியா மேல் நீதிமன்றத்தின் அறிவித்தலுக்கமைய முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆரம்ப விசாரணைகளில் இது தொடர்பில் கண்கண்ட சாட்சிகள் போதிய அளவில் சாட்சியமளித்திருக்கின்றனர். இத்தகைய ஒரு நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுந்தல சரணடைந்தவர்கள் காணாமல் போனதற்கான சாட்சிகள் இல்லையென கூறியிருப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற நடவடிக்கையாகும்.
அதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு உள்ளகப் பொறிமுறையின் கீழ் பொறுப்பு கூறுவதற்கு அரசாங்கம் முயற்சிகள் எடுத்துள்ள நிலையில் அவர் வெளியட்டுள்ள கருத்துக்கள் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகின்ற நிலைமையே வெளிப்படுத்தி இருக்கின்றன.