அரசாங்கத்தின் செயற்பாடு சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : சஜித்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் தந்தை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அளித்த அறிக்கை, இலங்கைக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணையை வேண்டி நின்கின்றனர். அது நிறைவேறாத நிலையில் ஜெனீவாவில் தற்போது நடந்து வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் தந்தை, இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற விடயங்கள் நாட்டிற்குப் பொருத்தமில்லாத விடயங்கள் என்பதால், இங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதேவேளை, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான அவநம்பிக்கைப் பிரேரணையை நிராகரிப்பதற்கு ஏதுவாக அமைந்த காரணங்களை சபைக்கு சமர்ப்பிக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தொடர்பில் எமக்கு தனிப்பட்ட எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அவர் தற்போது பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்றைக் கொண்டு வந்ததன் பின்னர், அதனை நிராகரிப்பதற்கு அடிப்படையாக இருந்த செயலாளர்கள் குழாமின் அறிக்கைகள் மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கை உள்ளிட்ட ஏனைய விடயங்கள் இந்த சபைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் கோரினார்.