மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்தாது – சுஜிவ சேனசிங்க

வரவு – செலவு திட்டத்தில் எதிர்பார்ப்புக்களே அதிகமாகும். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற எந்த யோசனையும் அதில் இல்லை. அதேநேரம் அரசாங்கம் கடந்த வருடம் ஒதுக்கிய நிதியில் பல வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்படாமல் அந்த நிதி மீண்டும் திறைசேரிக்கு சென்றுள்ளது. இவர்களின் இயலாமையே இதற்கு காரணமாகும்.  அதனால் அரசாங்கம் தேர்தல் ஒன்றை நடத்தினால் நிலைமையை தெரிந்துகொள்ளலாம். அதனால் மாகாண சபை தேர்தலை அரசாங்கம் அடுத்த வருடம் நடத்தப்போவதில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் சுஜிவ சேனசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  திங்கட்கிழமை (10) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட  வரவு – செலவு திட்ட உரை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசாங்கத்துக்கு இதற்கு முன்னர் ஆட்சி செய்த அனுபவமில்லை. என்றாலும் தேர்தல் காலத்தில்  இவர்கள் மக்களுக்கு அளித்துவந்த வாக்குறுதிகள் மீது மக்கள் நம்பிக்கை  வைத்து, இவர்களுக்கு ஒருதடவை கொடுத்துப் பார்ப்போம் என்றே மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆட்சி வழங்கி இருக்கின்றனர். தற்போது மக்கள் அதுதொடர்பில் கைசேதப்படுகின்றனர்.

ஜனாதிபதி அடுத்த வருடத்துக்காக சமர்ப்பித்திருக்கும் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்ப்பாக்கப்படும் விடயங்களே அதிகமாக இருக்கின்றன. ஆனால் இந்த  எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுவதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில் நாடொன்றின் அபிவிருத்திக்கு பிரதானமாக 4விடயங்கள் தேவைப்படுகின்றன. அதாவது வருமானத்தை அதிகரிப்பது, நேரடி முதலீடு, தொழில் உருவாக்குதல் மற்றும் நவீன தொழிநுட்பம். இவற்றை மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் இருக்கும்  பிரேரணைகள்  என்ன? இதனை அடைந்துகொள்ளாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

கடந்த வருட  வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் 11 சட்ட மூலங்களை சமர்ப்பித்திருந்தது. அதில் ஒன்றைக்கூட பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்து நிறைவேற்றவில்லை. அதேபோன்று கடந்த வருடம் வரவு செலவு திட்டத்தில் பல்வேறு  வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கிய பணத்தை இவர்களுக்கு செலவழிக்க முடியாமல் போயிருக்கிறது. இவை மக்களுக்கு வழங்கவேண்டிய சேவைகளை நிறைவேற்ற தவறிய குற்றத்துக்காக சிறைக்கு செல்லக்கூடிய தவறாகும்.  ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்காமல் இருந்தால் எப்படி நாட்டில் அபிவிருத்தி ஏற்படும்? இவர்களுடன்  வேலை செய்ய முடியாது என கடந்த ஒருவருடத்தில் 26 அதிகார்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். ஒருபோதும் இவ்வாறு இடம்பெற்றதில்லை.

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தபோது ரணில் விக்ரமசிங்க,  பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தார். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அன்று எமது பொருளாதார வளர்ச்சியை பார்த்து உலக வங்கி பாராட்டி இருந்தது. ஆனால் 2025 4, 22 உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் நாட்டின் வறுமை நூற்றுக்கு 22வீதம். இந்த நிலை தொடர்ந்தால் வறுமை  நூற்றுக்கு 32 வீதமாகலாம். 293 ரூபாவுக்கு இருந்த டொலர் தற்போது  307 ரூபா. இவ்வாறு இருக்கையில் அஸ்வெசும நிவாரணம் கேட்பவர்கள், யாசகம் கேட்பவர்களாகும் என அமைச்சர் ஒருவர் தெரிவிக்கிறார்.  இவ்வாறு தெரிவிப்பதற்கு வெட்கப்பட வேண்டும்.