வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து அரசாங்கம் ஆராய்வு

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஆளும் தேசிய மக்கள் சக்தி இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என அதன் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நிஹால் அபேசிங்க, கட்சி இன்னும் சாதக பாதகங்களை ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். “நாங்கள் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. இதில் ஒரு தார்மீகப் பிரச்சினை இருப்பதை நாங்கள் அறிவோம். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்,” என அவர் தெரிவித்தார்

இதேவேளை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்த பிரேரணையில் இரண்டு முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்திற்குத் தேவையான தரமான நிலக்கரியைப் போதிய அளவில் கொள்வனவு செய்யத் தவறியதன் மூலம், அமைச்சர் தனது முதன்மைப் பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது ஒரு தேசிய எரிசக்தி சொத்தை நிர்வகிப்பதில் காட்டப்பட்ட பயங்கரமான அலட்சியம் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அத்துடன் இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக கையூட்டல், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.  அன்றைய தினம் முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.