தேர்தல் விவகாரத்தில் திணறும் அரசாங்கம்-பி.மாணிக்கவாசகம்

411 Views

அரசாங்கம் இரண்டு தோணிகளில் கால் வைத்த ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. பொதுத் தேர்தலுக்கான முன்கள நிலைமையும், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் கட்ட நிலைமையும் இதனைத் தெளிவுபடுத்துவனவாக அமைந்திருக்கின்றன.

நிறைவேற்றதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நாடாளுமன்றத்தை வலிந்து கலைத்து, பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கொரோனா வைரஸ் அதற்குத் தடையாக அமைந்தது. வகை தொகையின்றி ஆட்களைப் பலி கொள்ளும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தேர்தலைப் பின்போட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அதனால் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்டி உரிய சட்டங்களை உருவாக்கி அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து வைரஸ் நோய்ப் பரவல் நிலைமையை எதிர் கொள்ள வேண்டும் என்று எதிர்க் கட்சிகளும் அரசியல்வாதிகளும் வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் எதிர்க் கட்சியினருடைய கோரிக்கைகளை ஏற்க மறுத்த ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச எதிர்க் கட்சிகளின் வழிமுறையிலும், அவர்களுடைய ஒத்துழைப்பிலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதிலும் பார்க்க, இராணுவத்தின் துணையுடன் அதனை இல்லாதொழிக்க முடியும் என்ற முனைப்பில் காரியங்களை முன்னெடுத்தார். கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஒரு போதும் மீண்டும் கூட்ட முடியாது என தீர்மானமாக மறுத்துரைத்தார்.

அவ்வாறு கூட்டினால், எதிர்க் கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து நம்பிக்கை இல்லாப் பிரேரணையை கொண்டு வந்து அரசாங்கத்தை பதவி இழக்கச் செய்து விடுவார்கள் என்பதற்காக அந்த யோசனையை அவர் முற்றாக நிராகரித்தார். பொதுஜன பெரமுனவும் அவருக்கு உறுதுணையாகச் செயற்பட்டது. அமைச்சர்களும் ஜனாதிபதியின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரித்து கருத்துக்களை வெளியிட்டனர்.

மேலோட்டப் பார்வையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான இராணுவ முனைப்பு கொண்ட அரச நடவடிக்கைகள் வெற்றியளித்திருந்ததாகவே தெரிந்தன. நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. உயிரிழப்புக்கள் இரண்டு இலக்க எண்ணிக்கையின் ஆரம்ப நிலையிலேயே தக்க வைக்கப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவில்லை. முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் வெலிசறை கடற்படை முகாமை எதிர்பாராத விதமாகத் தாக்கியிருந்தது. படைமுகாம் என்ற காரணத்தினால் அது சமூகத் தொற்றாக விரிவடைவதை அதிகாரிகளினால் தடுக்கக் கூடியதாக இருந்தது.gjgjkzhkjzh தேர்தல் விவகாரத்தில் திணறும் அரசாங்கம்-பி.மாணிக்கவாசகம்

ஆனால் வெலிசறை கடற்படை முகாமைத் தொடர்ந்து கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் நிலை சமூகத் தொற்றாக – இரண்டாவது நோய்த் தொற்று அலையாக மாறிவிடுமோ என்ற அச்சத்தைப் பரவலாகத் தோற்றுவித்துள்ளது.

கொரோனா வைரஸ் மனித உயிர்களைக் குடித்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் இருக்க, ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை நடத்த முடியாமல் செய்துவிடுமோ என்ற அரசியல் ரீதியான அச்சமும் தலைதூக்கி உள்ளது. இதனால் நாட்டு மக்களின் உயிர்ப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதைப் போலவே, தேர்தலும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.

ஆட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதே கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முதல் முக்கிய நடவடிக்கையாகும். அலுவல்கள் தேவைகளுக்காக மக்கள் அலுவலகங்களிலோ வர்த்தக நிலையங்களிலோ சந்தைகளிலோ அல்லது வைத்தியசாலை மற்றும் பேரூந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களிலோ செல்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டியதும், ஒரு மீற்றர் தூரத்தைப் பேண வேண்டிய அவசியம் பொது மக்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டது. கண்டிப்பாகக் கடைப்பிடிககுமாறு வற்புறுத்தப்பட்டது.

அது மட்டுமல்லாமல் கட்டிடங்களுக்குள் பிரவேசிக்கும் முன்னர் கைகளைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டியதும் கட்டாயப்படுத்தப்பட்டது. இவ்வாறான நோய்த் தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கியமாகப் பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதைக்  கூடிய அளவில் தவிர்க்க வேண்டும் என்றே நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கியமாக அறிவுறுத்தப்படுகின்றது.

இதனால் மக்கள் கூட்டம் கூடுவதையும், ஒன்று கூடுவதையும் சுகாதார நடைமுறைகள் தடை செய்கின்றன. ஆனால் தேர்தல் பிரசார தேவைக்காக மக்கள் ஒன்று கூடுவதும் கூட்டங்களில் கலந்து கொள்வதும் தேர்தல் ஜனநாயகத்தில் அதிமுக்கிய நடவடிக்கையாக உள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டாய நிலைமைக்குள் தேர்தல் கால சூழல் பிரவேசித்திருக்கின்றது.

கொரோனா வைரஸ் பரவும் அபாய நிலை காரணமாக தேர்தல் பிரசாரத்துக்காக ஒழுங்கு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டங்களை அரச தரப்பு பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் இரத்துச் செய்திருக்கின்றார்கள். சுகாதாரத் துறையினர் தேர்தல் கால கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது என பரிந்துரை செய்திருக்கின்றார்கள்.

யுத்தத்தில் வெற்றி பெற்றிருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் குடும்ப ஆட்சி காரணமாக நாட்டில் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட ஜனநாயகத்தைப் பாதுகாத்து நிலைநிறுத்தப் போவதாக உறுதியளித்து, ஐக்கிய தேசிய கட்சியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்திருந்த நல்லாட்சி அரசு எதிர்பார்த்திருந்த வகையில் ஆட்சியை நல்ல ஆட்சியாக நடத்த முடியாமல் போனது.

இதனால் ஜனாதிபதி தேர்தலின் மூலம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ராஜக்சக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசியல் உறுதிப்பாட்டுடன் கூடியதோர் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காகப் பொதுத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கத்தை 2015 ஆம் ஆண்டு தேர்தலில் உருவாக்கிய ஐக்கிய தேசிய கட்சியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது பாரம்பரிய அரசியல் பலத்தை இழந்து நலிவடைந்த நிலையில் இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுத்திருக்கின்றன.

சிறீலங்கா சுதந்திர கட்சிக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சி இந்தத் தேர்தலில் பிரகாசமான வெற்றிவாய்ப்பைக் கொண்டதாகத் திகழ்கின்றது.

அதேவேளை உட்பிளவுகளினால் தனது பாரம்பரிய அரசியல் செல்வாக்கை இழந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று, ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய கட்சியை முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய ரணசிங்க பிரேமதாசாவின் புதல்வர் சஜித் பிரேமதாசா உருவாக்கி உள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இடம்பெறவுள்ள 2020 பொதுத் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் உட்பிளவுகள் காரணமாக நலிவுற்ற நிலையில் இருண்ட அரசியல் எதிர்காலத்தைக் கொண்டிருப்பவையாகக் காணப்படுகின்றன.ranil wickremesinghe and sajith premadasa தேர்தல் விவகாரத்தில் திணறும் அரசாங்கம்-பி.மாணிக்கவாசகம்

சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பதிலாக உருவாகிய பொதுஜன பெரமுன முதலில் உள்ளுராட்சிச் சபைத் தேர்தலிலும் பின்னர் 2019 ஜனாதிபதி தேர்தலிலும் சிங்கள பௌத்த மக்களின் செல்வாக்கைப் பெற்று முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. தொடர்ந்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் அது வெற்றியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி பொதுஜன பெரமுனவைப் போன்று வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதைக் காண முடியவில்லை.

இந்த நிலைமைகள் ஒரு புறமிருக்க, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் கொரோனா வைரஸ் பரவல் மையமாக மாறியுள்ளதையடுத்து, ராஜாங்கனை யால பிரதேசத்தில் 12 ஆயிரம் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் வைரஸ் பரவல் நிலைமை காரணமாக நாட்டின் 16 மாவட்டங்களில் கொரோனா நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கச் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகாலை, புத்தளம், குருணாகலை, மொனராகலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 16 மாவட்டங்களே இவ்வாறு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவியுள்ள மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தைச் சூழ்ந்த பகுதிகளில் மூவாயிரம் பேருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கச் செயலாளர் மகேந்திர பாலசூரிய கூறியுள்ளார்.

இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை உருவாகி இருப்பதாகப் பொது மக்கள் கருதுகின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்கவும் இந்த நோய்த் தொற்று குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

தெற்கில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்டிருப்பதனால் அங்கு சமூக நிலையில் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று அவர் சுட்டிக் காட்டியிருக்கின்றார். தேர்தலைப் பின்போட வேண்டும் என்பது அவருடைய கோரிக்கை. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசாவும் தேர்தலை ஒத்திப் போட வேண்டும் என்று குரல் எழுப்பி உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கான மத்திய நிலையமாக கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் உருவாகியுள்ளதையடுத்து. தேர்தல் பிரசார நடவடிக்கைகளும், தேர்தலுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகளை அஞ்சல் திணைக்களம் துரிதமாக முன்னெடுத்திருக்கின்றது. ஆனால் கந்தக்காடு நோய்ப் பரவல் நிலைமை காரணமாக நோய்த் தொற்றுக்கு உள்ளாகியவர்களும், சந்தேகத்திற்கு உரியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தனிமப்படுத்தல் முகாம்கள் அமைந்துள்ள பிரதேசங்களிலும், அவற்றை அண்டிய பகுதிகளிலும், தனிமைப்படுத்தலுக்கான வீடுகள் அமைந்துள்ள பிரதேசங்களிலும் வாக்குச்சீட்டு விநியோகம் மேற்கொள்வதை அஞ்சல் திணைக்களம் இடை நிறுத்தி உள்ளது.

தேர்தலுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் இது மிக முக்கியமான பாதிப்பாகவும் பின்னடைவாகவும் கருதப்படுகின்றது. அதேவேளை, தனிமைப்படுத்தல் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளவர்களின் வாக்குரிமைக்கு வாய்ப்பளிப்பதற்காக பிரத்தியேக தினத்தில் அவர்கள் வாக்களிப்பதற்குத் தேர்தல் திணைக்களம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்கமைய ஆகஸ்ட் 4 ஆம் திகதி அவர்கள் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவிவிடும் என்ற அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் பிரசாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது, எவ்வாறு தாங்கள் பொது மக்களைச் சந்திப்பது, வாக்காளர்களிடம் தங்களுடைய கருத்துக்களை அழுத்தமாகவும், சுதந்திரமாகவும் இயல்பான ஒரு நிலையில் கொண்டு சேர்ப்பது என்பதில் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் சிக்கல்களை எதிர் கொண்டிருக்கின்றார்கள்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் தேர்தல் விதிமுறைகளை மீறுவது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான சுகாதார நெறிமுறைகளையும் வேட்பாளர்களும் அரசியல்வாதிகளும் மீறிச் செயற்படுவதாக சுகாதாரத் துறையினர் குற்றம் சுமத்தி இருக்கின்றார்கள். சுகாதார விதிமுறைகளை அரசியல்வாதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கான வழிகாட்டல்களை வர்த்தமானியில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் அவசரப்படுத்தி அரசாங்கத்திடம் வலியுறுத்தி உள்ளார்கள்.

இந்த சுகாதார நெறிமுறைகள் குறித்த வழிகாட்டல்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட வேண்டியதன் அவசியத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவும் சுட்டிக்காட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவுறுத்தல்கள் இல்லாத காரணத்தினால் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது கைக்கொள்ளப்பட வேண்டிய நெறிமுறைகள் மீறப்படுவது தொடர்பில் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாதிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

தேர்தல் கால சுகாதார வழிமுறைகள் குறித்த சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்கள் ஐந்து வாரங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்டு விட்டன. ஆனால் சுகாதார அமைச்சும் அரசும் அந்த வழிகாட்டல்களை அதிகாரபூர்வ அறிவித்தலாக வர்த்தமானியில் வெளியிடுவது தொடர்பில்  உரிய அக்கறை செலுத்தவில்லை. அந்த நடவடிக்கை காரணமின்றி பின்போடப்பட்டிருந்தது. தாமதப்படுத்தப்பட்டிருக்கின்றது. எனினும் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அந்த வர்த்தமானி அறிவித்தல் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறியுள்ளார்.

தேர்தல் நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களினால் வேட்பாளர்களும் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளும் நெருக்கடிகளை எதிர் கொண்டிருக்கின்றன. ஏனெனில் இந்தத் தேர்தல் சாதாரண காலத்தில் இடம்பெறுகின்ற ஒரு தேர்தலைப் போலல்லாமல் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் என்ற உயிரச்சுறுத்தல் நிலைமைகளில் நடைபெறுகின்ற நெருக்கடிகள் மிகுந்த தேர்தலாகும்.

இதனால் தேர்தல் பிரசார நடவடிக்கைகளும், வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் சுயேச்சை குழுக்கள் என்பன தங்களுடைய தேர்தல் கால கொள்கைகள் தீர்மானங்களைப் பொது மக்கள் மத்தியில் கொண்டு சென்று வாக்காளர்களைக் கவர முடியாத நிலைமைக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.

இந்த நிலையில் கண்டும் காணாத நிலைமையில் இருக்கின்ற சுகாதார நடைமுறைகளையும் வழிகாட்டல்களையும் வர்த்தமானியில் வெளியிட்டால், அது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு மேலும் சிரமங்களை ஏற்படுத்தும் என்றும், இதனால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என்ற அரச தரப்பு சிந்தனையின் காரணமாகவே வர்த்தமானியை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கின்றது என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

எது எப்படியாயினும், முழு அளவிலான அதிகாரத்தைக் கொண்ட அரசியல் பலமுள்ளதோர் அரசாங்கத்தை உருவாக்கிவிட வேண்டும் என்பதற்காக நாலரை வருடங்கள் முடிவிலேயே முன்னைய அரசாங்கத்தின் நாடாளுமன்றத்தைக் கலைத்த கோத்தாபாய ராஜபக்ச தனது திட்டப்படி உடனடியாகப் பொதுத் தேர்தலை நடத்த முடியாத நிலைமைக்கு ஆளாகியுள்ளார்.

யுத்தத்தில் வெற்றி கொண்ட தங்களிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தையும் நாட்டின் அரசியல் செல்வாக்கையும் 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கிய ரணில் – மைத்திரி – சந்திரிகா – சம்பந்தன் கூட்டணி மீது அரசியல் ரீதியாக அளவற்ற சினத்தை ராஜபக்சக்கள் கொண்டிருந்தனர். இன்னும் அவர்களின் இந்த சினம் ஆறவில்லை.000 தேர்தல் விவகாரத்தில் திணறும் அரசாங்கம்-பி.மாணிக்கவாசகம்

இதனாற்தான் எந்த வகையிலாவது மீண்டும் ஆட்சி அதிகாரத்தையும், இழந்து போன அரசியல் செல்வாக்கையும் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படையாகக் கொண்டு பொதுஜன பெரமுன என்ற புதிய அரசியல் கட்சியை உருவாக்கி உள்ளுராட்சித் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பவற்றில் வெற்றி பெற்று அவர்கள் அரசியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ஆனால் பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அறுதிப் பெரும்பான்மை கொண்டதோர் அரசாங்கத்தை அமைத்துத் தமது குடும்ப அரசியலை நிலைப்படுத்துவதற்கான முயற்சிகளை ராஜபக்சக்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இந்தத் தேர்தலுக்கான அவர்களுடைய முன்னெடுப்புக்கள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி இருக்கின்றன. தேர்தல் சட்டத்திற்கமைவாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதில் இருந்து 3 மாதங்களுக்குள் புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்து அதன் முதலாவது அமர்வை நடத்தி முடித்துவிட வேண்டும் என்ற கட்டாய நியதியை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவினால் நிறைவேற்ற முடியாமல் போய் விட்டது.

மார்ச் மாதம் 2 ஆம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மூன்று மாத காலக் கெடுவாகிய ஜுன் 2 ஆம் திகதியைக் கடந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட போதிலும், தீர்மானித்துள்ளபடி ஆகஸ்ட் 5 ஆம் திகதி தேர்தலை நடத்தி முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் ஏற்பட்டுள்ள புதிய தொற்று நிலைமைகளே இதற்குக் காரணம்.

நாடாளுமன்றம் இல்லாத நிலையில் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியின் பொறுப்பில் காபந்து அரசாங்கம் அதற்குரிய 3 மாத காலக்கெடுவைக் கடந்து செயற்படுவது அரசியலமைப்புக்கு முரணானது என்பது அரசியல் நோக்கர்களின் பொதுவான கருத்து. இத்தகைய ஓர் அரசியல் நிலைமை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் ஆட்சியிலேயே நிகழ்ந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலையும் நடத்த வேண்டும். சுகாதார, அரச, இராணுவ நெறிமுறிகளை முறித்து எகிறிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் பரவலையும் தடுத்து நிறுத்தி நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற இரண்டு அதிமுக்கிய தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலைமைக்குள் அரசு தள்ளப்பட்டிருக்கின்றது.

கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதையடுத்து, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டி, ஆட்கொல்லிக் கிருமியை ஒன்றிணைந்த நடவடிக்கைகளின் மூலமாகவும், அதற்கான விசேட சட்டவிதிகளை உருவாக்கி அவற்றின் ஊடாகவும் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

அதன் பின்னர் செப்டம்பர் வரையிலான ஆட்சிக் காலத்தைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கான தேர்தலை நடத்தி அரசியலமைப்புச் சட்டவிதிகளுக்கு அமைவாகப் புதிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்திருக்க முடியும். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுள்ள அரசு இப்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை என்ற ஆபத்து நிலைமைக்கும், இரண்டு தடவைகள் ஏற்கனவே திகதி நிர்ணயம் செய்து பின்போடப்பட்ட பொதுத் தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டிய கட்டாய நிலைமைக்கும் முகம் கொடுத்து திணறிக் கொண்டிருக்கின்றது.

 

 

Leave a Reply