மனித புதைகுழிகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு

மனிதப் புதைகுழி அகழ்வு விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை தமிழர்களுக்கு உண்டு என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பற்றிய அலுவலக நடவடிக்கை மற்றும் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்காக முதற்கட்டமாக 65 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல் விசாரணை அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக 375 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

மனிதப் புதைகுழிகள் அகழ்வு குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அகழ்வுப் பணிகளுக்கு தேவையான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயத்தில் அரசாங்கம் வெளிப்படையாக செயற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மட்டத்திலும் ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை தமிழர்களுக்கு உண்டு என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் காணப்படும் தொழில்நுட்ப மற்றும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தயாராகவே உள்ளதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.