உள்நாட்டு கடனை மறுசீரமைக்க அரசாங்கம் தீர்மானம்

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.  பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் மத்திய கால திட்டங்களை அடையாளங்காண்பதற்காக நியமிக்கப்பட்ட தேசிய சபை உப குழுவின் முதலாவது அறிக்கையில் இவ்விடயம் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

முறையான கலந்துரையாடலின் பின்னர், பொது இணக்கப்பாட்டின் பிரகாரம் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென அந்த குழு தெரிவித்துள்ளது.

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சபைக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு குறுகிய கால மற்றும் மத்திய கால திட்டங்களை அடையாளங்கண்டு பரிந்துரை செய்வதற்கான தேசிய உப குழு, பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நியமிக்கப்பட்டது.

டிரான் அலஸ், வஜிர அபேவர்தன உள்ளிட்ட மேலும் 10 உறுப்பினர்கள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்த உப குழுவின் முதலாவது அறிக்கை இன்று வௌியிடப்பட்டதுடன், கடன் மறுசீரமைப்பு மற்றும் அரச நிதிக்கொள்கை குறித்த விடயங்களில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு ஏற்பாடுகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்க வேண்டியது அவசியமென பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியதாக அந்த குழு தெரிவித்துள்ளது. உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்காமை, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை மேலும் கடினமாக்கக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், ஏற்கனவே உள்நாட்டு கடனைக் கொண்டு கொள்வனவு செய்வதற்கான இயலுமை 60 வீதத்தை விடவும் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  ஆகவே, பொது இணக்கப்பாட்டிற்கு அமைய, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வங்கிகளின் வைப்பீட்டாளர்கள், ஊழியர் சேமலாப நிதியத்தின் பயனாளிகள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்காக முறையான கலந்துரையாடலை நடத்தி, பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கை ஊடாக வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியுமென்பதே உப குழுவின் நிலைப்பாடாகும்.  இலங்கை இருதரப்பு மற்றும் திறந்த சந்தையில் பெற்றுக்கொண்டுள்ள வௌிநாட்டுக் கடனை மீள செலுத்துவதை ஏற்கனவே இடைநிறுத்தியுள்ளதுடன்,சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் 2.9 பில்லியன் டொலர் கடன் வசதி மீதே முழுமையான எதிர்பார்ப்பும் வைக்கப்பட்டுள்ளது.

ஊழியர் மட்ட இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருந்தாலும் 4 தவணைகளில் வழங்கப்படவுள்ள இந்த 2.9 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக செலுத்தப்படாதுள்ள கடன் தொடர்பில் உரிய திட்டமொன்றை தயாரிக்க வேண்டியுள்ளது. குறித்த கடன் தொகையில் ஒரு பகுதியை இரத்து செய்வது IMF-இன் எதிர்பார்ப்பாகும்.

எவ்வாறாயினும், இலங்கைக்கு கடன் வழங்கிய முக்கிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனா, இதுவரை கடனை தள்ளுபடி செய்வதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்தியா மற்றும் ஜப்பானுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வந்தாலும் சீனாவுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் இதுவரை உரிய தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இதேவேளை, அரச மற்றும் தனியார் கடன் வழங்குநர்கள் மத்திய வருமானம் பெறும் நாடுகளுக்கு கடன் சலுகை வழங்குவதற்காக தலையீடு செய்து நியாயமான பங்களிப்பை வழங்க வேண்டுமென இந்தோனேசியாவின் பாலி நகரில் கூடியுள்ள G20 அமைப்பின் அரச தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.