சுரேஷ் சலே விடயத்தில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்த அரசாங்கம்!

குற்றப்புலானாய்வு திணைக்களத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சுரேஸ் சலே தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட கூற்றுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மோசமாக நடத்தப்படுவதாக விமல் வீரவன்ச தெரிவித்திருந்த நிலையில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதற்கு பதிலளித்துள்ளார்.

“தனக்குத் தெரிந்தவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து இதுபோன்ற நிலைமைகள் குறித்து எந்த முறைப்பாடும் வரவில்லை” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளபோது, சலே செய்தித்தாள்களை விரித்து தூங்க கட்டாயப்படுத்தப்படுவதாகவும், எலிகள் அவர் மீது ஓடுவதாகவும், மோசமான சுகாதார நிலைமைகளுக்கு மத்தியில் அவர் கடுமையான அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தநிலையில், பல சந்தேக நபர்கள் முன்னர் விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நான்காவது மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அத்தகைய நிலைமைகள் குறித்து யாரும் முறைப்பாடு அளிக்கவில்லை என்றும் அமைச்சர் நளிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தால், குற்றப்புலனாய்வு திணைக்களம் இந்த விடயத்தை ஆராய்ந்து தேவைப்பட்டால் விசாரணையை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.