குற்றக்குழுவுடன் தொடர்பை பேணிய அரசியல்வாதிகளின் பட்டியலை வெளியிட அரசாங்கம் தயார்

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்த அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பத்மே உள்ளிட்ட சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 30 தொலைபேசிகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, குறித்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், முழுமையான விசாரணைகளின் பின்னர் இது குறித்த தெளிவான விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால “கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட திட்டமிட்ட குற்றக்குழுவை சேர்ந்தவர்கள் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் வசமிருந்த 30 தொலைபேசிகள் தொடர்பாக தற்போது விசாரணைகள் நடத்தப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

அந்தத் தொலைபேசிகள் ஊடாகப் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலங்கள் மூலம், அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அந்த அரசியல்வாதிகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்துத் தெளிவான அறிக்கையொன்றை வெளியிடுவோம்.தற்போது விசாரணைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.