கொரோனா மற்றும் விலைவாசி அதிகரிப்பு என்பவற்றின் காரணமாக பெருந்தோட்ட மக்கள் பல்வேறு சவால்களுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். இதனால் இம்மக்களின் சகல துறைகளும் பாதிப்பை எதிர் கொண்டுள்ளன.
இந்நிலையில் அரசாங்கம் இம் மக்களுக்கு மானியங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று பேராதனைப் பல்கலைக்கழக பொருளியற்றுறை மூத்த விரிவுரையாளர் திருமதி சோபனாதேவி இராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“உலகளாவிய ரீதியில் கொரோனாவின் பாதிப்பு அதிகமுள்ளது. இதனால் பல துறைகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் வாய்ப்பு நிலைமைகளும் மோசமடைந்துள்ளன. குறிப்பாக பின்தங்கிய மக்கள் கொரோனாவினால் அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதே உண்மை.
பின்தங்கிய மக்களின் வரிசையில் மலையக பெருந்தோட்ட மக்களும் உள்ளடங்கும் நிலையில், கொரோனா இவர்களில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவினால் கல்வி, சுகாதாரம், இயல்பு வாழ்க்கை எனப் பலவும் தேக்க நிலையினை அடைந்துள்ளன. நகர்ப்புறங்களில் தொழில் புரிந்த இளைஞர்கள் தொழில்வாய்ப்பின்றி பெற்றோரில் தங்கி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது பல் வேறு சிக்கல்களுக்கும் வித்திட்டுள்ளது.
இதேவேளை மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்தாற்போல இலங்கையின் சமகால விலைவாசி அதிகரிப்பும் பெருந்தோட்ட மக்களை பெரிதும் பாதித்துள்ளது. ஏற்கனவே வருமானப் பற்றாக்குறை காரணமாக பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் விலைவாசி அதிகரிப்பினால் மேலும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பசி, பட்டினி மலையகத்தில் தலை விரித்தாடும் நிலையில், ஒருவேளை உணவையேனும் திருப்தியாக உண்ண முடியாத நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டுள்ளமை வருந்தத்தக்கதாகும்.
அத்தோடு இரசாயனப் பசளை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று, நான்கு நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாக கண்டனங்கள் மேலெழுந்து வருகின்றன.
இதேவேளை தொழிலாளர்களுக்கு ஆயிரம்ரூபா நாட்சம்பளம் அண்மையில் வழங்கப்பட்டதைத் தொட ர்ந்து நிறுவனத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. தொழிலாளர்களின் பல உரிமைகளும் பறிபோகின்ற நிலையில் இலாபத்தை மையப்படுத்திய நிறுவனங்களால் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றார்கள். இது முறையற்ற ஒரு செயலாகும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார நெருக்கடி குரல்வளையை நெரித்து வருகின்ற நிலையில் மாற்றுத் தொழில் வாய்ப்பின்றி இவர்கள் அல்லல்படுகின்றார்கள்.
எனவே இம்மக்களின் பொருளாதார அபிவிருத்தி கருதி அரசாங்கம் மானியங்கள் பலவற்றையும் பெற்றுக் கொடுக்க முன்வருதல் வேண்டும். இது இவர்களின் பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவேனும் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதாக அமையும்.
அத்தோடு தோட்டங்களில் 35,000 ஹெக்டேயருக்கு அதிகமான தரிசு நிலங்கள் பயனின்றி காணப்படுகின்றன. இந்த நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்காக இளைஞர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கோஷங்கள் நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வருகின்றன. எனினும் இதுகாலவரை இது சாத்தியப்பாடற்ற ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.
இந்நிலையில் தோட்டப்புற தரிசு நிலங் களை இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுத்து, அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக உதவுதல் வேண்டும். இவ்விடயத்தில் நிறுவனத்தினர் உரிய அக்கறையினை வெளிப்படுத்த வேண்டும்.
இவற்றோடு தொழிலாளர்களின் சுயதொழில் ஊக்குவிப்பு விடயத்திலும் உரிய கவனம் செலுத்தப்படுதல் வேண்டும். இதற்கான கடன் வசதிகளை தொழிலாளர்கள் பெற்றுக் கொள்வதற்கும், இலகு தவணை முறையில் செலுத்துவதற்குமான ஏற்பாடுகளை வங்கிகளுடன் கலந்து பேசி மலையக அரசியல்வாதிகள் செய்து கொடுக்க வேண்டும். இதன்போது குறைந்த வட்டி வீதம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய ஏற்பாடுகளின் மூலமாக தோட்டங்களையும் தொழிலாளர்களையும் அழிவுப் பாதையில் இருந்து மீட்டெடுத்து அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என்று கருதுகின்றேன்” என்றார்.