ரோஹிங்கிய அகதிகளைச் சந்திப்பதற்கு, ஐ.நா அதிகாரிகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்கலாக ரோஹிங்கிய புகலிடக் கோரிக்கையாளர்களைச் சந்தித்து, அவர்களது தேவைப்பாடுகளை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் அவர்களுக்கான சர்வதேச பாதுகாப்பைக் கோருவதற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தினால் தொடர்ச்சியாக உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அதற்கு தற்போது வரை இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை என அம்முகவரகத்தின் உயர்ஸ்தானிகர் மரிக்கோ ஹோல் விசனம் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2024 நவம்பர் மாதம் முல்லைத்தீவு கடற்பரப்பில் சிக்கித்தவித்த படகிலிருந்து மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்கிய புகலிடக்கோரிக்கையாளர்கள் இன்னமும் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பாதுகாப்புசார் தேவைப்பாடுகள், புகலிடக்கோரிக்கைகள் மற்றும் தற்போதைய வாழ்க்கை நிலை என்பவற்றை மதிப்பீடு செய்வதற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகம் பல தடவைகள் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்த போதிலும், அதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் உயர்ஸ்தானிகர் மரிக்கோ ஹோல், இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய புகலிடக்கோரிக்கையாளர்களின், குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் நலன் தொடர்பில் தாம் மிகுந்த கரிசனை கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மியன்மாரில் தீவிரமடைந்த வன்முறைகளிலிருந்து தப்பி இலங்கை கடற்பரப்பை வந்தடைந்த இந்த ரோஹிங்கிய புகலிடக்கோரிக்கையாளர்களை கொழும்பை அண்மித்த பொதுமக்கள் தடுத்துவைப்பு நிலையங்களுக்கு மாற்றுமாறு நீதிமன்றத்தினால் அறிவுறுத்தப்பட்ட போதிலும், அதற்கு மாறாக அவர்கள் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்துக்கு மாற்றப்பட்டதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் அவர்களைச் சந்திப்பதற்கு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரக அதிகாரிகளுக்கு உடனடியாக அனுமதி அளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மோதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை இவ்வாறு தெளிவான அறிவித்தல்களின்றி நீண்டகாலம் தடுத்துவைப்பது மனித உரிமைகள் சார்ந்து தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.



