புதிய அமெரிக்க பரஸ்பர தீர்வை வரியின் இலங்கை மீதான தாக்கம் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு இடையேயான சர்வகட்சி கூட்டம் ஒன்று இன்று (10) நடைபெற்றது. இதில், அமெரிக்காவுடன் HS குறியீடு அடிப்படையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவது குறித்து பொதுவான உடன்பாடு காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
டொனால்ட் டிரம்ப் அறிவித்த தீர்வை வரி குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் நடந்த சந்திப்பு வெற்றிகரமாக அமைந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலக உடனடி பிரச்சினையுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த நாம் அனைத்தையும் செய்யும் அதேவேளையில், அமெரிக்காவுடன் “HS குறியீடு அடிப்படையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதே இன்று ஏற்பட்ட பொதுவான இணக்கப்பாடு என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம் இந்தியா உடனான “ECTA” உடன்படிக்கை விரைவாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் ஹர்ச டீ சில்வா வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, இந்த சந்திப்பு தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைக்கு ஏற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி, கட்சித் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பான விடயங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
அமெரிக்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான பரிந்துரைகளைத் தயாரிப்பது மற்றும் ஏற்றுமதி இலக்குகளை பல்வகைப்படுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.