அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முன்னுரிமை அளிக்கவும் – ஜனாதிபதி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், சேதங்களுக்கான இழப்பீடு வழங்கும் பணியை விரைவுபடுத்தி, விவசாயம், மீன்பிடி மற்றும் தொழில்துறைகளை மீட்டெடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 25 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.

புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை (13) முற்பகல் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

அண்மையில் ஏற்பட்ட சூறாவளி, முழு நாடும் ஒன்றாக முகங்கொடுத்த  மிகப் பாரிய பேரழிவு என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க முப்படைகள், பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள் செய்த பெரும் அர்ப்பணிப்பைப் பாராட்டியதோடு, அந்த அர்ப்பணிப்பின் காரணமாகவே, மின்சாரம், நீர் மற்றும் வீதிகள் போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் கணிசமான அளவு புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கம் பேணும் வலுவான நிதி ஒழுக்கத்தின் காரணமாகவே, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வளவு அதிக அளவிலான இழப்பீட்டை வழங்க முடிந்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.