ஜெனிவா தீா்மானம்:”அமைச்சா் அலிசப்ரியின் இறைமை பற்றிய பேச்சு வெறும் பிதற்றல்” சி.வி.விக்னேஸ்வரன்

‘ஜெனிவா தீா்மானத்தை நடைமுறைப்படுத்தாமைக்கு ஒரேயொரு காரணம் அமைச்சா் அலிசப்ரியின் பேச்சில் தென்படுகிறது. அதாவது சர்வதேச நீதிபதிகள் போர்க்குற்ற விசாரணையை நடத்துவது நாட்டின் இறைமையைப் பாதிக்கும் என்றுள்ளார். அது வெறும் பிதற்றல்’என வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

ஜெனிவாவில் வெளிவிவகார அமைச்சரின் உரை தொடா்பாகக் கேட்கப்பட்டபோதே விக்கினேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தாா்.

“இலங்கை அரசாங்கம் உள்ளடங்கலாகவே 46/1 பிரேரணை சென்ற ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இலங்கை அதை ஏற்க முடியாது என்று அன்று வெளிநடப்பு செய்யவில்லை” எனவும் சுட்டிக்காட்டிய விக்னேஸ்வரன், “உயிர்த்த ஞாயிறு விசாரணைக்காக பிறநாட்டு விசாரணையாளர்களை அரசாங்கம் தருவித்து விசாரணை நடத்தியது. அப்போது நாட்டின் இறைமை எங்கு போனது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளாா்.

போர்க்காலத்தில் இஸ்ரேலிய மோசாட் போன்ற அமைப்புக்களை இங்கு தருவித்து அரசாங்கத்திற்குச் சார்பாக புலிகளுக்கு எதிராகப் போரில் ஈடுபட வைத்த போது எமது நாட்டின் இறைமை எங்கு போனது? உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு பற்றி சானி அபயசேகரா என்ற சிரேஷ்ட பொலிஸ் அலுவலர் விசாரணை செய்த போது குறித்த குண்டு வெடிப்பில்  இராணுவத்தினரின் பங்கு இருந்தமை அவருக்குத் தெரிய வந்தது. அதுபற்றி இராணுவத்தினருடன் பேசிய போது அவர்கள் தமக்கு இட்ட ஆணைகளையே தாம் நிறைவேற்றினார்கள் என்று கூறியுள்ளார்கள். ஆகவே குண்டு வெடிப்பில் அரசாங்கத்தின் பங்கு இருந்திருக்கின்றது. இதையே பேராயர் மல்கம் இரஞ்சித்தும் கூறி வருகின்றார் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தாா்.

ஆனால் விசாரணை பற்றிய அறிக்கை வெளிவந்ததும் சானி அபயசேகராவை சிறையில் அடைத்தார்கள். இவ்வாறான ஒரு நாட்டில் உள்நாட்டு விசாரணையின் ஊடாக உண்மை புலப்படுமா? உண்மையை வெளிவர அரசாங்கத்தினர் இடம் அளிப்பார்களா? எனவும் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

அலி சப்ரியை வைத்து இராஜபக்ச அரசாங்கம் நாடகமாடுகிறது. ரணில் ராஜபக்சக்களின் முகவரே. நடப்பது போர்க் குற்றவாளிகளின் அரசாங்கமே. அதனால்த்தான் இறைமை பற்றி அலி சப்ரி பேசி சர்வதேச விசாரணையை நடத்த விடாமல் செய்யப் பார்க்கின்றார். ஆனால் அந்தப் பருப்பு வேகாது என்றே நான் நினைக்கின்றேன் எனவும் நீதியரசா் விக்கினேஸ்வரன் தெரிவித்தாா்.