ஜெனிவா விவகாரம் : 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா கடும் அழுத்தம் -விமல் வீரவன்ச

மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி ஊடாக  இலங்கைக்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு எதிராக இம்முறை புதிய பிரேரணை கொண்டு வரப்படுமாயின் அதனை அரசாங்கம் மாத்திரமல்ல,சகல எதிர்க்கட்சிகளும் நிபந்தனையின்றிய வகையில் கண்டிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளரின் 46.1 பிரேரணையின் பரிந்துரைகளை நிராகரித்த இலங்கை பிரதிநிதிகள் இலங்கையின் பொருளாதார பாதிப்பு தொடர்பான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கவில்லை எனவும் சுட்டிக்காட்டி விமல் வீரவன்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையின் இராணுவ பாதுகாப்பு பிரதானிகளுக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்து சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் 51ஆவது கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்ட 46.1 என்ற யோசனை ஊடாக நிறுவப்படும் போர் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சாட்சி திரட்டலுக்காக  சர்வதேச மட்டத்தில் பொறிமுறை இணைத்துக்கொள்ளப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கையின் இராணுவ பிரதானிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வமாக சாட்சியங்களை வழங்குவதுடன்,அதனை சர்வதேச நீதிமன்றுக்கு வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் 51ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் கலந்துக்கொண்ட பிரதிநிதிகள் ஆணையாளின் அறிக்கைக்கு எதிராக கருத்துரைத்துள்ளனர். குறிப்பாக இம்முறை முன்வைக்கப்பட்ட பொருளாதார பாதிப்பு தொடர்பாக ஆணையாளர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கையின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இராணுவத்தினர் தரப்பிலான நியாயத்தை எடுத்துரைக்க விசேட வாய்ப்பு கோரப்படவில்லை. 2015ஆம் ஆண்டு முதல் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கப்படும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், இராணுவ தரப்பினரது நியாயத்தை எடுத்துரைப்பதற்கும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

விசேடமாக சர்வதேசத்தினால் அங்கிகரிக்கப்பட்ட போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான 5 விசேட நிபுணர்களினால் தயாரிக்கப்பட்ட 6 அறிக்கைக்கமைய இலங்கையின் பாதுகாப்பு,இராணுவத்தினர் போர் குற்றங்களில் ஈடுப்படவில்லை.என ஆதாரபூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அவதானம் செலுத்தாமலிருப்பது ஆச்சரியத்திற்குரியது.

இதற்கு மேலதிகமாக 51ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொண்ட இந்திய அரசாங்கத்தின் வதிவிட பிரதிநிதி தமிழ் சமூகம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளார். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இலங்கைக்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் 30.1 மற்றும் 40.1 ஆகிய யோசனைகளை நிராகரித்துள்ள நிலையில் அதற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் இந்தியா அரசாங்கத்தின் பிரதிநிதி அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் இலங்கைக்கு எதிராக 50.1 யோசனையை சமர்ப்பிக்குமாயின் அதற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதி அவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புதிதாக ஒரு பிரேரணை முன்வைக்கப்படுமாயின் அதனை அரசாங்கம் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் நிபந்தனையின்றிய வகையில் கண்டிக்க வேண்டும்.