
இலங்கை இராணுவத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) பதவியிலிருந்தும், இலங்கை இராணுவத்தில் இருந்தும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஓய்வுபெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (29) தெரிவித்துள்ளது.
எனினும், புதிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி தொடர்பில் அமைச்சகம் தகவல் வெளியிடவில்லை.
ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஜூன் 1, 2022 முதல் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாதுகாப்புப் படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப் பிரிவின் தளபதியாக கடமையாற்றியிருந்தார்.
பின் அவர் இலங்கை இராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவிக்கு பதவி உயர்வு பெற்றார். பின்னர், அவர் நாட்டின் ரிசர்வ் ஸ்ட்ரைக் ஃபோர்ஸ் (RSF) என்றும் அழைக்கப்படும் 53 வது பிரிவுக்கு கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தமை குறிவிப்பிடத்தக்கது.
மேலும் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் ஷவேந்திர சில்வாவுக்கு முக்கிய பங்கிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த பலர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறியே மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது அமெரிக்க நீதிமன்றத்தில் 2011ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



