தங்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டமைக்கு சுமந்திரனே காரணம் என்கிறார் கஜேந்திரகுமார்!

03. ‘புதிய அரசியலமைப்பு மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பாக தங்களது தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இலங்கை தமிழரசு கட்சியிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும்’ என்று எதிர்பார்த்திருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் கூட்டாக செயற்படுவது தொடர்பான கலந்துரையாடலுக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை தமிழரசு கட்சி புறக்கணித்திருந்தது. குறித்த கலந்துரையாடல் தொடர்பான அழைப்புக் கடிதம் ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரால் இலங்கை தமிழரசு கட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த கடிதத்துக்கு பதிலளித்திருந்த இலங்கை தமிழரசு கட்சி, ‘தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடிதம் தொடர்பில் தங்களது மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

இதன்படி, ‘புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தற்போதைய அரசாங்கம் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாலும், அதற்கான வரைவு எதுவும் சமர்ப்பிக்கப்படாத நிலையிலும் அரசியலமைப்பு வரைவு தொடர்பில் தற்போது விவாதிப்பது பொருத்தமற்றது’ என்று இலங்கை தமிழரசு கட்சியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உரிய நேரம் வரும் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடலாம் எனவும், இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொழும்பில் இன்று (22) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக் குமார் பொன்னம்பலம், தங்களது தரப்பிலிருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வெளிப்படுத்திய அக்கறைக்கும், தற்போது அவர் பதிலளித்துள்ள விடயத்துக்கும் இடையே பாரிய வேறுபாடு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையே, இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளராக எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டார்”அவரது நியமனத்துக்கு பின்னரே இவ்வாறான பதில் இலங்கை தமிழரசு கட்சியிடம் இருந்து கிடைக்கப்பெற்றது’ என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த காலங்களில் எம்.ஏ.சுமந்திரன் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஆதரித்ததாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ‘இந்த விடயம் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி மீண்டும் கலந்துரையாடி சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும்’ என்று எதிர்பார்ப்பதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.