அனைத்து தமிழ்தேசிய கட்சிகளுடனும் கலந்துரையாடி புதிய அரசியல்யாப்பு விடயமாக ஒரு நிலைப்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாரின் முயற்சி வரவேற் கத்தக்கது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் கூறுகையில், ‘’தற்போது தேசிய மக்கள் சக்தி இலங்கையில் மட்டக் களப்பு மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அதி கூடிய ஆசனங்களை பெற்று 159, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி பீடம் ஏறியுள்ளது.
பாராளுமன்றத்தில் எந்த ஒரு சட்டமூலத்தையும் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான் மையுடன் நிறை வேற்றக்கூடிய பலம் அவர்களுக்கு உண்டு.
இந்நிலையில் புதிய அரசியல் யாப்பு எதிர்வரும் வருடங்களில் தயாரித்து சுலபமாக அவர்கள் நிறைவேற்றக்கூடிய ஆதரவு அவர்களுக்கு உண்டு. இதனை சாதக மாக தமிழ் தலைமைகள் மாற்ற வேண்டிய கடமை சகல தமிழ் தலைவர்களுக்கும் உண்டு. இதில் கட்சி அரசியலுக்கு அப்பால் கொள்கை அரசியலே முதன்மை பெறவேண்டும்.
கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் 2015, தொடக்கம் 2019, வரை பாராளுமன்றத்தில் பல குழுக்களை அமைத்து புதிய அரசியல் யாப்பு வரைவு தயாரிக்கப்பட்டது. அதில் தமிழ்தேசிய கூட்டமைப்பால் முன்வைக் கப்பட்ட சமஷ்டி அடிப்படையிலான தீர்வு விடயம் உள்வாங்கவில்லை என ஒரு சாராரும், அதில் சமஷ்டி என்ற சொல்பதம் இல்லை எனினும் சிங்கள மொழியில் “எக்கராச்சிய” என்ற சொல்லுக்குள் சமஷ்டி உள்ளது என ஒரு சாராரும் கூறி விமர்சனம் செய்தனர்.
உண்மையில் தமிழர்களுக்கான உரிமைகள் தமிழர்களுக்கான தீர்வுகள் இலங்கையில் புதிய அரசியல் அமைப்பை தயாரிக்கும் போது தமிழர்களுக்கு விளங்கும் தமிழ் மொழியிலேயே அந்த சொற்பதங்கள் அமையவேண்டும். சிங்கள மொழியில் “எக்கராச்சிய” அல்லது அவர்களை திருப்திப்படுத்துவதற்கான சொல்
லாடல்களை ஆமோதித்து புதிய அரசியல மைப்பில் தமிழர்களுக்கான உரிமை மறுதலிக்கும் விதமாக அரசியல் யாப்பு அமையுமானால் அது கடந்த 1972. 1978, ஆண்டுகளில் தமிழ் தலை மைகள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் அமைப்பாக மாறவே சந்தர்ப்பங்கள் உண்டு. அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட வரைவு மற்றும் தமிழ்த்தேசிய கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வார இறுதியில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்ட மைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் சந்திக்க விருக்கிறார்.
கடந்தவாரம் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத்தலைவர் ஶ்ரீதரனையும் சந்தித்திருந்தார். அண்மையில் நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து, இனிவருங்காலங் களிலேனும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டுப் பயணிக்கவேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி தமிழ் மக்கள் பேரவையி னால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன் மொழிவை அடிப்படையாகக்கொண்டு ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை களை நடத்துவதாக கஜேந்திரகுமார் கூறியுள்ளார்’ என்றார்.
அதற்காக தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வு முன்மொழிவுகளை ஏற்க வேண்டும் என நான் கூறவில்லை, அந்த முன் மொழிவுகளையும், நல்லாட்சி காலத்தில் தயாரித்த முன்மொழிவுகளையும் இரண்டு வரைவுகளையும் மீண்டும் ஒரு தடவை சகல தமிழ்தேசிய கட்சிகள், சிவில் அமைப்புகள், புத்தி ஜீவிகள், என்போர் ஆராய்ந்து ஒட்டுமொத்த தமிழர்களும் ஏற்கும் விதமாக புதிய அரசியல் யாப்பு தமிழ் தேசிய தலைமைகளும் ஏற்றதான யாப்பாக வரவேண்டும் என்பதே எமது விருப்பம்.
இதில் யார் முயற்சி எடுக்கிறார் என்பதை விட என்ன முயற்சி எடுக்கிறார் என்பதை மட்டும் பார்த்து விமர்சனங்களை முன்வைப்பதே ஆரோக்கியமானதாக அமையும் எனவும் மேலும் கூறினார்.