அரசாங்கம் தமிழ் மக்களை புறக்கணிப்பதாக கஜேந்திரகுமார் சாடால்

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஆளுங்கட்சியானது, தமிழ் மக்களின் கருத்துக்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கட்சித் தலைவர்கள் சிவில் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருந்தனர். எனினும், குறித்த சிவில் அமைப்புகளுடனான விடயத்தில் அரசாங்கம் தவறிழைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் 2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகளை நிறைவேற்றுவதாகக் கூறப்பட்ட வாக்குறுதிகள் காரணமாகவே, மக்கள் இலங்கைத் தமிழரசுக்கட்சியை வெறுக்கும் நிலை உருவானதாக அவர் குறிப்பிட்டார். தற்போது 10 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் தமிழ் கட்சிகளுடன் எவ்விதமான கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை.

அத்துடன் தமிழ் கட்சிகளுடன் அரசாங்கம் எந்தவொரு உடன்பாட்டையும் எட்டவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றாமல் அரசாங்கத்தால் ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இலங்கையின் இந்த அமைவிடத்தைக் கைப்பற்றுவதற்காகப் பல வல்லரசுகள் போட்டிபோடுகின்றன. இவ்வாறானதொரு சூழலில் நாட்டில் ஸ்திரத்தன்மை என்பது மிகவும் அவசியமானது.

ஸ்திரத்தன்மை இல்லாத பட்சத்தில் வெளிநாட்டினரின் தலையீடுகள் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்க வேண்டுமானால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குக் கட்டாயமாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை இன்றும் தீர்க்கப்படாமல் தொடர்கிறது என்ற நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.