மக்களின் அபிலாசைகளுக்கு புறம்பாக தமிழ் தலைவர்கள் செயல்படுவதாக கஜேந்திரகுமார் சாடல்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பில் தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதில் ஏனைய தமிழ்க் கட்சிகள் முரணாகச் செயற்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் முக்கிய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் “இந்திய இல்லத்தில்” நேற்று (23) மாலை சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தநிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடனான குறித்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்டார்.

13ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் கடந்த 38 வருடங்களாக அதனை நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கேட்டுக்கொண்டே இருக்கின்றது. நாமும் அதனை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டுமே தவிர, அதற்கு அப்பால் எதுவும் நடக்கப்போவதில்லை என்ற உண்மையை தாம் அமைச்சர் ஜெய்சங்கரிடம் மிகத் தெளிவாக வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றையாட்சியை நிராகரிக்க வேண்டும் என்ற மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் அந்த ஆணைக்கு மாறாகச் செயற்படுவது தமிழ் இனத்தின் துரதிஷ்டம் என்று அவர் குறிப்பிட்டார். சமஷ்டித் தீர்வை வலியுறுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் குரலைத் தனிமைப்படுத்தும் நோக்கில் ஏனைய கட்சிகள் செயற்பட்டதாகவும், ஒற்றையாட்சிக்குள் முடங்கியுள்ள எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களுக்குப் பொருத்தமற்றது என்பதை இந்த கட்சிகள் வலியுறுத்தத் தவறியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடினார். இவ்வாறான போக்குகள் தமிழ் மக்களின் அரசியல் இலக்குகளை அடைவதற்குப் பெரும் தடையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.