தையிட்டி விவகாரத்தில் நியாயமான கலந்துரையாடலை நடத்த கஜேந்திரகுமார் கோரிக்கை

மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் தொடர்ச்சியாக பிற்போட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் தமது முகவர்களை மாகாண அமைச்சர்களாக நியமித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடியுள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சுகாதாரத்துக்கு பவானந்தாராஜா, கல்விக்கு ஜெகதீஸ்வரன், மகளிர் விவகாரத்துக்கு ரஜீவன், உள்ளுராட்சி மன்றங்களுக்கு இளங்குமரன், விவசாயம் மற்றும் காணிக்கு திலகநாதன் என்ற அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண நிழல் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது முதுகெலும்பில்லாத கேவலமானதொரு செயற்பாடு என்றும் தேர்தலை நடத்தினால் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக தையிட்டியில் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரை தொடர்பில் கொழும்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது என்பதையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்த கலந்துரையாடலில் புத்தசாசன அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டவிரோத தையிட்டி விகாரை விகாராதிபதி அழைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் சட்டவிரோதமாக காணிகள் பறிக்கப்பட்ட பொதுமக்கள் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த செயற்பாடு எவ்வாறான நீதி நடவடிக்கையாக அமையும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் கேள்வி எழுப்பினார்.

திஸ்ஸ விகாரை சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் கட்டப்பட்டது. புத்தசாசன அமைச்சுக்கோ அல்லது அரச நிறுவனங்களுக்கோ அறிவிக்காமலேயே இந்த விகாரை கட்டப்பட்டது. முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த சட்டவிரோத செயற்பாட்டில் முன்னின்று செயற்பட்டார்.

இராணுவ ஆட்சிக்கான ஒரு அடையாளமாக இந்த விகாரை சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் அகில இலங்கை பௌத்த காங்கிரசின் தலைவர் யாழ்ப்பாண அரசாங்க அதிபரை அச்சுறுத்தும் வகையில் இந்த விகாரை குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

இவர் ஓய்வுப்பெற்ற புலனாய்வு அதிகாரி. இது எவ்வகையான இராணுவ மயமாக்கல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
இது இனவாதத்தின் மிக மோசமான முகம். இதற்கும் பௌத்த மதத்துக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லை. தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை செய்த இராணுவம் அதே மனநிலையில் இருந்துக் கொண்டு இந்த விகாரையை கட்டியது.

இந்த விடயத்தை அரசாங்கத்துக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பேசாமல் ஒரு தரப்புடன் மாத்திரம் பேசுவது எந்தளவுக்கு நியாயமானதாக அமையும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கம் ஒருபுறம் மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடுகிறது. மறுபுறம் ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் தமது உறுப்பினர்களை நியமித்துள்ளது. இது முதுகெலும்பு இல்லாத கேவலமானதொரு நிலைமை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடினார்.