அவசர கால சட்டத்தால் அடிப்படை உரிமை மீறப்படமாட்டாது!

அவசரகால சட்டம் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தடுப்பதற்காக மட்டுமே நோக்கம் கொண்டது என்றும், இது அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படாது என்றும்  காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை ஊடகப்  பேச்சாளர், ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே குறித்த விடயத்தை குறிப்பிட்டார்.  பொது நலன்புரி முயற்சிகள் மற்றும் நடந்து வரும் நிவாரண நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்பி அச்சத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டங்கள், பீதியை உண்டாக்க தகவல்தொடர்பு தளங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை மட்டுமே குறிப்பாக இலக்கு வைக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். திருத்தப்பட்ட பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40), கீழ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இந்த அவசரகாலச் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இது அனர்த்த மீட்பு, பொதுப் பாதுகாப்பு மற்றும் தேசிய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த தற்காலிக அதிகாரங்களை வழங்குகிறது. எனினும், இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கவலைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த அவசரகால சட்டங்கள் கருத்து சுதந்திரத்தை அல்லது அரசாங்கத்தின் விமர்சனத்தை ஒடுக்கப் பயன்படுத்தப்படாது என்று உறுதியளித்தார்.

விமர்சனம் அல்லது பாதகமான கருத்துக்களால் தாமோ தமது நிர்வாகமோ கலக்கம் அடையவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.  இதற்கிடையில், புதிதாக வெளியிடப்பட்ட அவசரகால சட்டங்களின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என்று அவதானித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதியிடம் இந்த வாரம் தமது கருத்துக்களை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவ, சரத்துக்களின் சில பிரிவுகள் முதல் வாசிப்பில் சிக்கலானதாகத் தோன்றுவதாகவும், அவசரகால அதிகாரங்கள் அரசியலமைப்பின் வரம்புகளுக்குள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.