மண்ணெண்ணெய் விலை உயர்வால் ஓடு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், தேவையான மண்ணெண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், களிமண் கூரை ஓட்டுக்கு தட்டுப்பாடு அதிகளவில் ஏற்படும் எனவும் அகில இலங்கை களிமண் கூரை ஓடு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பெப்டிஸ்ட் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“நாடு முழுவதும் எங்கள் சங்கத்துக்குச் சொந்தமான சுமார் 250 ஓடு ஆலைகள் உள்ளன. மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. எஞ்சிய சிலவும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் நடாத்தி வருகின்றோம் மேலும், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியதால், நாம் சிக்கலுக்கு ஆளானோம். இப்போது இந்தத் தொழிலை எப்படி நடத்துவது?
நாங்கள் அரசிடம் அதிகம் கேட்கவில்லை. எங்கள் தொழிலை நடத்த வாரத்திற்கு 50 லீற்றர் மண்ணெண்ணெய் மட்டுமே கேட் கின்றோம்.
எங்கள் தொழிற்சாலைகள் உள்ளூர் கூரை தேவைகளில் 40% பூர்த்தி செய்கின்றன. இத்தொழிற்சாலைகளை நடத்துவதற்கு ஒவ்வொரு தொழிற்சாலை உரிமையாளரும் சுமார் 40 மில்லியன் ரூபாவை முதலீடு செய்கிறார்கள். மண்ணெண்ணெய் விலை உயர்வு, தட்டுப்பாடு போன்ற காரணங்களால் எங்களை நிலை கேள்விக்குறியாக உள்ளது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் எமது தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றார்கள். அவர்களின் வருமானம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. தொழிற்சாலை உரிமையாளர்களாகிய நாங்கள் வரிசையில் நின்று மண்ணெண்ணெய் எடுத்து இந்த தொழிலை நிர்வகித்தோம். ஆனால் தற்போது வரிசையில் காத்திருந்தும் மண்ணெண்ணெய் கிடைப்பதில்லை.
இதுவரை கியூவில் நின்று வாங்க முடியாத அளவுக்கு எண்ணெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலைமையால் நாட்டில் நிர்மாணிக்கப்படும் வீடுகளுக்கு வெளிநாட்டில் இருந்து கூரைத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கு பெருமளவிலான டொலர்கள் தேவைப்படும். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் சுமூகமான பதில்கள் வரவில்லை. எங்களுக்கு உதவி செய்யுங்கள் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்” என சங்கத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.