இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் நாளைய தினம் (04) பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்த சங்கத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
ஏற்கனவே வழங்கப்பட்ட 3 சதவீத கழிவு கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்த நிலையில் இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் புதிய கட்டளைகளை ஏற்பதை இடை நிறுத்தியது.
இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் வாகன வரிசை ஏற்பட்டது.
இதேவேளை, எரிபொருள் விநியோகத்தை சீர்குலைப்பதற்கு குழு ஒன்று முயற்சிப்பதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய, ‘நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தி பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அரசாங்க செயற்பாடுகளை சீர்குலைக்கும் இவ்வாறான குழு தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ‘எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு இவ்வாறானதொரு நிலையை உருவாக்கியுள்ளனர்’ என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
‘அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையும் இன்றி விநியோகிக்கப்படுகிறது’ என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



