கடந்த வாரத்தில் உலகின் கூட்டாண்மை பங்காண்மை அரசியல் மாற்றங்கள் இதுவரை இருந்து வந்த உலகின் அரசியல் நிலைப்பாடுகளில் தலைகீழ் மாற்றங்கள் தொடங்கிவிட்டதை உலகுக்கு தெளிவாக்கியுள்ளன.
இவற்றில் ஒன்றாக பலஸ்தீனிய தேசத்திற்கான அங்கீகாரம் முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடான பிரான்சால் வெளியிடப்பட்டமை அமைகிறது. பலஸ்தீனத்தில் ஆறாயிரம் குழந்தைகள் செத்த உடம்பில் உயிர்வாழும் நிலையில் இஸ்ரேலின் உணவை ஆயுதமாக்கிப் பட்டினிச்சாவால் பலஸ்தீனியக் குழந்தைகளின் உயிரை உடலைச் செயலிழக்க வைக்கும் இனஅழிப்புத் திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைக்கு உலகின் வல்லாண்மைகள் நவீன போர்க்கருவிகள் வழங்கலால் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் எதார்த்த நிலையில் பிரான்சின் அரசத்தலைவர் பெருமதிப்புக்குரிய மாக்ரோன் அவர்கள் பலஸ்தீனிய மக்களைக் காக்கும் மனிதாபிமானப் பிரகடனமாக பலஸ்தீனிய தேச அங்கீகாரத்தை வெளியிட்டுள்ளமையை இலக்கு நெஞ்சாரப் பாராட்டுகிறது.
அதே வேளை தன்னுடைய நாட்டின் மக்கள் என்று பலஸ்தீனியரை அனைத்துலக வல்லாண்மைகளின் துணையுடன் கூறிக்கொண்டு பலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக செயற்படுவதைத் தடுக்கும் தேசிய பாதுகாப்புச் செயற்பாடுகளே என்று இஸ்ரேல் தனது இனஅழிப்பை மனிதப்படுகொலைகளைச் சிறுவர் வதைகளை நியாயப்படுத்துவதில் இதுவே பலஸ்தீனியரைப் பாதுகாப்பதென்றால் பலஸ்தீனியமும் தேசம் என்ற அங்கீகாரமே உடன் தேவையென்ற பிரான்சிய அரசத்தலைவரின் செயலின் நேர்மையையும் உண்மையையும் பிரான்சுக்கு முன்பே கடந்த வருடங்களில் பலஸ்தீனிய தேசத்தை அங்கீகரித்த ஸ்பெயின் நோர்வே அயர்லாந்து போன்ற நாடுகளையும் இலக்கு நன்றியுடன் பாராட்டுகிறது. கூடவே பிரித்தானியப் பிரதமர் இடம் இன்று பிரித்தானியாவின் நூறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனுப்பிய பலஸ்தீனிய தேசத்துக்கான பிரித்தானியாவின் அங்கீகாரக் கோரிக்கை மனுவையும் இலக்கு பாராட்டுகிறது.
இந்நேரத்தில் சிறிலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு யூலை ஈழத்தமிழின அழிப்பினை அடுத்து இஸ்ரேலுடன் இணைந்து தனக்கான போர்க்கருவிகளையும் புலனாய்வுப் பலத்தையும் பெருக்கிய பொழுது, இஸ்ரேல் புலனாய்வுத்துறை ஈழத்தமிழர்களைச் சிறிலங்கா இனஅழிப்பு செய்வதற்கு எத்தகைய மனிதவதைகளை சிறிலங்கா கையாள நெறிப்படுத்த உதவியதோ அத்தகைய மனிதவதைகளினையே காசாவில் தற்போது கையாண்டு வருகிறது என்பதையும் இதன் உச்சமாக சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத் தேச இனஅழிப்பு அமைந்தது என்பதையும் உலக மக்களுக்கு ஈழத்தமிழர்கள் கவனப்படுத்தப்பட வேண்டிய நேரமிது என்பது இலக்கின் எண்ணம்.
அவ்வாறே சிறிலங்காவும் 1983 முதல் இன்று வரை தொடர்ச்சியாகத் தான் ஈழத்தமிழினத்தின் மேல் மேற்கொண்டு வரும் அனைத்து இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு என்பனவற்றையும் தன்னுடைய நாட்டின் குடிகள் என ஈழத்தமிழர்களை உலகுக்கு வெளிப்படுத்தி அவர்களின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரான நடவடிக்கையெனத் திரிபுவாதம் செய்து தான் தனது தேசிய பாதுகாப்பை நிலைப்படுத்துவதற்கான படை நடவடிக்கைகளைச் செய்வதாகவே நியாயப்படுத்தி வருகிறது. இதனை ஈழத்தமிழர் பிரான்சிய அரசத்தலைவருக்கும் மற்றைய உலக நாடுகளுக்கும் தெளிவுபடுத்தி பிரான்சிய அரசத்தலைவர் எவ்வாறு பலஸ்தீனிய தேசத்தை அங்கீகரித்து பலஸ்தீனியர்களை இனஅழிப்பில் இருந்து காக்க முயற்சிக்கின்றாரோ அவ்வாறு ஈழத்தமிழர்களது யாழ்ப்பாண வன்னியரசாக பிரித்தானியா ஆட்சிப்படுத்திய இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு ஈழத்தமிழர் தாயகத்தை ஈழத்தமிழர்களின் நாடாக அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டிய நேரமிது என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது.
அதே நேரம் பிரித்தானியாவின் நிதி உதவியால் இந்தியா வளம் பெற்ற வரலாறு மாறி இந்தியா பிரித்தானியாவில் 6 பில்லியன் பவுண்சை முதலிட்டுப் பிரித்தானிய பொருளாதாரத்துக்கு உதவும் ஒப்பந்தத்தில் இந்தியப்பிரதமர் இலண்டன் வந்து கையொப்பமிட்டுச் சென்றமை மற்றொரு வரலாற்று மாற்றமாக உள்ளது. இந்த மாற்றம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஸ்கொட்லாந்தில் உள்ள கோல்வ் விளையாட்டு மைதானத்துக்கு யூலை 25 வந்து அங்கு மைதானத்தில் விளையாட்டினை ஆரம்பிப்பதற்கு இருதினங்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது. இந்நேரத்தில் அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்ப் தனது வர்த்தகப் போரில் தான் இந்தியச் சந்தையை இழக்காது ஏற்புடைய வரிக்குறைப்பைச் செய்ய வேண்டிய தேவையை அவருக்கு இம்மாற்றம் உணர்த்தியுள்ளது. இவ்வாறு இந்திய-பிரித்தானிய-அமெரிக்க கூட்டு என்பது பசுபிக் இந்து மாக்கடல் பகுதியில் சீன மேலாதிக்கத்தை மட்டுப்படுத்தும் தேவையாகவும் யப்பான் அவுஸ்திரேலியா மற்றும் இந்துமாக்கடல் கரையோர நாடுகள் இணைப்பு வழி பலமடையும் என்பதும் இந்தியப் பிரதமரின் மாலைதீவு விஜயம் இதற்கான தன்மைகளை மேலும் பலப்படுத்தும் என்பதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இந்நிலையில் இந்தப்புதிய சூழலில் இந்தியா ஈழத்தமிழர்கள் உடனான கூட்டாண்மையைப் பங்காண்மையை முற்றிலும் கைவிட்டுச் சிறிலங்காவுடனான முழு அளவிலான கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்கு ஈழத்தமிழரின் தாயக தேசிய தன்னாட்சி எழுச்சி நிலை தடையாக உள்ளது. இதனால் இந்த ஈழத்தமிழரின் தேசிய விழிப்பின் மூச்சாகப் பேச்சாக ஒவ்வொரு ஈழத்தமிழரிலும் ஆற்றலாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தேசியத் தலைவரின் வாழுகின்ற இருப்புநிலையைக் கடந்த காலமாக்கும் எந்த முயற்சியிலும் ஈழத்தமிழர்களே ஈடுபட்டு தங்கள் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போடக் கூடாதென்பது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளதென்பதை இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.
ஒருவர் தான் என்ற தனித்துவத்தில் இருந்து தன்னை விடுவித்து உலக மக்களின் விடுதலைக்காகத் தேசமக்களின் சுதந்திரத்திற்காக மக்களாகவே தன்னை மாற்றுகின்ற பொழுது தோன்றுகின்ற மக்கள் சக்தி அவரைத் தலைமையாகக் கொண்டு கட்டமைந்து விடுதலைப் பேரொளியாக முன்னுள்ள அடக்குமுறை ஒடுக்குமுறை வரலாற்றை மாற்றும் என்பது உலக வரலாறு. மக்களோடு மக்களின் சுதந்திரத்தை மக்களே பெறுவதற்கான தலைமையாக மாறும் எவரும் தனியான தலைவராக உலகில் பார்க்கப்படுவதோ பேசப்படுவதோ இல்லை. நாங்களாகி விட்ட தலைமைக்குச் சாவில்லை. “நான் சாகலாம் நீங்கள் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது” என்று ஆணையிட்டுச் சென்ற மாவீரர் மொழியின் பொருளை விடுதலைக்கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றவர்கள் என்று அழகுதமிழில் எளிய மொழியில் தெளிவுபடுத்தினார். உலகின் வரலாற்றைக் கிறிஸ்துவுக்கு முன் கிறீஸ்துக்கு பின்என்று மாற்றிய இயேசுநாதர் முதல் உலக மக்களின் வரலாற்றை தங்கள் வாழ்வை மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் அர்ப்பணித்து மக்களின் வாழ்வை மண்ணின் வரலாற்றை மாற்றிய எந்த வரலாற்று மனிதர்களும் மரணித்த மனிதராகக் காலமானவராக உலகில் விளங்கியதில்லை. அதனாலேயே உலக நாடுகள் பலவும் தேசிய நாளாகத் தங்கள் தேசத்திற்காக வாழ்வினை மாவீரர்கள் அர்ப்பணித்தமையை நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகின்றன. இது ஈழத்தமிழர்களுக்கு கார்த்திகை 27 என்பது உலகறிந்தவொன்று.
மேலும் இயேசு கூறியது போல “நான் சொன்னதைச் செய்யுங்கள்” என்ற தலைமையின் அழைப்பை வாழ்வாக்குவதன் வழியாகவே அந்த தலைமையை உலகம் உள்ளவரை வாழவைப்பது உலக வழமை. இதற்கு ஈழத்தமிழர்கள் விதிவிலக்காகாது தேசிய விடுதலைப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்த அனைவரையும் தலைமையாகக் கொண்டெழுந்து இந்த மரணமற்ற மனிதகுல வாழ்வை வெளிப்படுத்திய முதல்வனை என்றும் வாழும் தலைவன் என தங்களை அர்ப்பணித்த அத்தனை இன்னுயிர்களினதும் குறியீடாகக் கொண்டு உயர்ச்சி பெற இலக்கு வாழ்த்துகிறது. அந்த உயர்ச்சியே சமகாலத்தில் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப்போகின்ற அத்தனை பிரச்சினைகளிலும் அவர்கள் நிலைத்து நிற்பதற்கான அவர்களின் ஒரேபலமாக அமையும் என்பதையும் இலக்கு தெளிவுபடுத்த விரும்புகிறது.
சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நடந்த தொழில்நுட்ப அறிவியல் எழுச்சிகளின் வளர்ச்சிக்குத் தேவையான கிடைத்தற்கரிய மூலவளங்களை சீனா உலகிற்கு வழங்கி ஏற்பட்டு வரும் மனிதத்துக்கான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளைத் தடைசெய்யாத வகையில் நல்லெண்ணத்தை நடைமுறைப்படுத்தியமைக்குச் சீனாவை இலக்கு வாழ்த்துகிறது. அரசியல் இணக்கப்பாட்டை விட மனித உள்ளங்களின் நல்லெண்ணமே உலகில் மனிதத்துவத்தை முதன்மைப்படுத்தும் என்பதை சீனாவிடம் சிறிலங்கா கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.
இலங்கைத் தீவின் பாதுகாப்பான அமைதியும் வளர்ச்சிகளும் பிரான்சின் பலஸ்தீனிய அங்கீகாரம் ஈழத்தமிழர்களின் இறைமையின் அங்கீகாரமாக மாற்றப்பட்டாலே நடைமுறைச்சாத்திமாகும் என்பதை அனைத்துலகிலும் உள்ள ஈழத்தமிழர்கள் உலகிற்கு உரையாடல்கள் வழி தெளிவுபடுத்த வேண்டிய காலமிது என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
ஆசிரியர்
ஈழத்தமிழர்களின் இறைமை அனைத்துலகால் ஏற்கப்பட்டாலே ஈழத்தமிழருக்கான அனைத்துலக நீதி நடைமுறைச் சாத்தியமாகும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 348