தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட உறுப்பினர்களுக்கு பிரான்ஸ் அழைப்பு

இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக பிரான்ஸ் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று (13) தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் (Rémi Lambert) இன்று, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவை சந்தித்தபோது இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இலங்கையுடனான தமது உறவில் பிரான்ஸிற்கு ரகசிய நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லை என்றும் பிரான்ஸ் தூதுவர் இந்தச் சந்திப்பின்போது உறுதியளித்தார்.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் முன்னெடுத்துவரும் திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களுக்காகத் தூதுவர் பாராட்டுத் தெரிவித்தார் என்றும் தேசிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.
அண்மைய நாட்களில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இலங்கைக்கான உலக நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.