அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிடும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

மக்களின் எதிர்ப்பு காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் குடியேறுவதற்கு ‘கிரீன் கார்டு’ கோரி விண்ணப்பித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள அவரது வழக்கறிஞர்கள் கடந்த மாதம் முதல் “கிரீன் கார்ட் ” வசதி மூலம் அமெரிக்க குடியுரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவியான திருமதி அயோமா ராஜபக்ஷ இன்னும் அமெரிக்க பிரஜையாக இருப்பதால், அந்த வசதியை முன்னாள் ஜனாதிபதி பெற முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தில் தங்கியிருப்பதாகவும், நவம்பர் மாதம் வரை அங்கு தங்கியிருக்க அவர் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிய நிலையில், தற்போது அந்த முடிவை ரத்து செய்துவிட்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி இலங்கைக்கு வரத் தயாராக இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் தற்போது அமெரிக்காவில் வீசா பெற்றுக்கொள்வது தொடர்பான நடைமுறைகளை தொடர்வதற்கு மேலதிக ஆவணங்களை சமர்ப்பித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.