தமிழர்களை தொடர்ந்து இலங்கையிலிருந்து படகுகளில் வெளியேறும் சிங்களவர்கள்

அண்மையில், அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக சென்று தஞ்சம் கோரிய 183 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசு நாடுகடத்தியிருப்பதாக அந்நாட்டு தரப்பிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் சிங்களவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரம், போர் சூழல், இன அச்சுறுத்தல்களால் கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் கோரி இருக்கின்றனர். இவ்வாறு தமிழர்கள் வேறு நாடுகளில் தஞ்சம் கோருவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி சிங்களவர்கள் பலரையும் தஞ்சம் கோர வைத்திருக்கிறது.

இந்திய தலைநகர் புது டெல்லியில் ஆசிய கடலோர காவல்படைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவுஸ்திரேலியாவின் கடல்சார் எல்லைக் கட்டளையின் தளபதியும் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் தளபதியுமான ஜஸ்டின் ஜோன்ஸ் இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டதை உறுதிச் செய்திருக்கிறார்.

நெடுந்தூர கடல் பயணித்துக்கு தகுதியற்ற 6 மீன்பிடி படகுகளில் அவுஸ்திரேலிய எல்லைக்குள் வந்த இலங்கையர்கள்- பெரும்பாலானோர் சிங்களவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர் என அவுஸ்திரேலிய தளபதி ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஆஸ்திரேலியாவின் எல்லைக் கட்டளை தளபதி ஜஸ்டின் ஜோன்ஸ், 2013, 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் இலங்கை, இந்தியாவிலிருந்து பெருமளவில் சட்டவிரோத குடியேறிகள் வந்ததாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“இலங்கையிலிருந்து (படகு வழியாக) அவுஸ்திரேலியாவை அடைய 21 நாட்களாகும். கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் எந்த ஆட்கடத்தல் படகுகளையும் நாங்கள் தடுப்போம். அதில் வருகிறவர்களை புறப்பட்ட இடத்திற்கோ அல்லது சொந்த நாட்டிற்கோ அல்லது பிராந்திய பரிசீலனை (மையம் உள்ள) நாட்டுக்கோ அனுப்பி வைப்போம்,” என அவுஸ்திரேலிய எல்லைக் கட்டளைத் தளபதி ஜோன்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

“அவுஸ்திரேலிய அரசாங்கம் மாறியிருக்கலாம், ஆனால் சட்டவிரோதமாக வருபவர்கள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கை மாறவில்லை,” என அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2013 ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு, கடல் வழியாக வரும் அகதிகளை ஒரு போதும் நாட்டினுள் குடியமர்த்த மாட்டோம் எனத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

கடந்த மே மாதம் அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் படகு வழியாக வரும் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற பார்வை இருந்தது. ஆனால், புதிதாக ஆட்சிக்கு வந்த அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி படகு வழியாக சட்டவிரோதமாக வருபவர்களை நாடுகடத்தும் கொள்கை தொடரும் என்பதை தனது நடவடிக்கைகளின் மூலம் எடுத்துக் காட்டியது.

படகு வழியாக தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை வழங்குவதாக புதிய அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.