மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என்றும் குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என்றும் யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.
பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வானிலை குறித்து எதிர்வுகூறுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தென்கிழக்கே நிலவும் காற்றுச் சுழற்சி மற்றும் தென்மேற்கு பகுதியில் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக தற்போது கிடைத்து வரும் மழை நாளை மறுதினம் (12) வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் கடந்த 18 மணித்தியாலங்களுக்கு மேலாக மழை கிடைத்து வருகின்றது. தொடர்ந்தும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குளங்கள் பலவும் வான் பாய்கின்றன. ஆறுகளும் அவற்றின் கொள்ளளவை எட்டியுள்ளன.
ஆகவே மன்னார், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்கள் வெள்ள அபாயம் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம். குறிப்பாக குளங்களின் கீழப்பகுதிகளில் உள்ள மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்.
வெள்ள நிலைமைகளை அவதானித்து முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன் மன்னார் மாவட்டத்திற்கு நீர் கொண்டு வரும் பாலியாறு, பறங்கியாறு போன்றவற்றின் நீரேந்துப் பிரதேசங்களில் மழை கிடைத்து வருகின்றது. எனவே இப்பகுதிகளில் உள்ள மக்களும் அவதானமாக இருப்பது அவசியம்.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளதோடு நாளை மறு தினம் வரை இந்த மழை தொடரும். எனவே இப்பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.



