இலங்கை முழுவதுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் ஒரு சில தாழ் நிலப்பகுதிகளில் சிறிய அளவில் வெள்ள அனர்த்தம் நிகழுக் கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்
09.12.2025 செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணியளவில் வானிலை குறித்து நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறுகையில்,
இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாகவும், இலங்கையின் தென்மேற்குப் பகுதியை மையம் கொண்டு நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாகவும், வடகீழ்ப் பருவக்காற்றுக் கொண்டு வரும் அதிக ஈரப்பதன் காரணமாகவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் பரவலான மழை எதிர்வரும் மூன்று தினங்களுக்கு குறிப்பாக எதிர்வரும் 12.12.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக நாளையும்(10.12.2025) நாளை மறுதினமும் (11.12.2025) நாட்டின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வடக்கு கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் நிலப்பகுதிகள் அவற்றின் தரைக்கீழ் நீரை உறிஞ்சும் முழுக்கொள்ளளவை அடைந்து விட்டன. குளங்கள் அவற்றின் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. சில பெரிய குளங்களின் மேலதிக நீர் வெளியேற்றத்துக்கான கதவுகள் இன்று பகல் திறக்கப்பட்டன (இரணைமடு).
இந்நிலையில் கிடைக்கும் மழை வீழ்ச்சி முழுவதும் தரை மேற்பரப்பில் தேங்குவதுடன் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தையும் உருவாக்கக்கூடும். எனவே வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள நிகழ்வுகள் தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம் என அவர் மேலும் கூறியுள்ளார்.



