யாழில் எதிர்வரும் 17 இல் இடம்பெறவுள்ள போராட்டத்துக்கு மீனவ ஒத்துழைப்பு இயக்கம் அழைப்பு

76 நாட்களை கடந்து கிரஞ்சியில் நடைபெற்றுவரும் அட்டைப் பண்ணைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவாகவும், யாழில் உள்ள ஏனைய அட்டைப்பண்ணைகள் அங்கு தொழில் செய்யும் மக்களுக்கு இடைஞ்சலாக இருக்கிற காரணத்தினாலும் அனலை தீவில் போராட்டமொன்று இடம்பெற்று வருகிறது. 

அதேவேளை அராலித்துறையில் அட்டைப்பண்ணை வேண்டாம் என மக்கள் கருத்து தெரிவித்த நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு குரல் கொடுக்கும் அமைப்பாக  எதிர்வரும் 17ஆம் திகதி மன்னார் பேருந்து நிலையத்தில் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம்.

இப்போராட்டத்துக்கு சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் தலைமைகள் அனைவருக்கும் பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம் என யாழ். மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்தார்.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது இதனை கூறிய அவர் மேலும் கருத்துரைக்கையில்,

17ஆம் திகதி மன்னார் பேருந்து நிலையத்தில் இடம்பெறும் போராட்டத்துக்கு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பிரதான நோக்கம், கடந்த 76 நாட்களாக மக்கள் போராடிவரும் நிலையில் எந்தவொரு அரசியல்வாதியும் களத்துக்கு செல்லவில்லை. களத்துக்குச் சென்ற எவரும் எவ்வித தீர்வுகளையும் வழங்கவில்லை.

போராடும் மக்கள் சிறிய மக்கள்,  அட்டைப்பண்ணையை வைத்திருப்போர் பெரிய மக்கள். ஆகவே, தமது வாக்குவங்கிகளை பாதுகாப்பதற்காகவே அவர்களும் இப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்க முன்வரவில்லை.

அட்டைப்பண்ணை வேண்டாமென நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளலாம். நானறிந்த வரை 50 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்திலிருந்து கரையோரங்களில் மக்கள் அட்டைகளை பிடிக்கும் நிலை காணப்பட்டது.

இதனை அட்டைப்பண்ணைகள் அமைக்க ஆரம்பித்த ஓரிரு நாட்களில் நாம் நேரில் சென்று அவதானித்தபோது மக்கள் இவ்விடயம்  தொடர்பாக கூறினர்.

அப்படிப்பட்ட இடங்கள் அடைக்கப்பட்டதாகவும் பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறியே அவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். அந்த வகையில் அந்த மக்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலே எம் போராட்டம் தொடரும்.  குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் அட்டைப்பண்ணை வைத்திருக்கும் சிலர் சில ஊடகவியலாளர்களை அழைத்துச் சென்று அட்டைப்பண்ணைகளை பார்வையிட்டுள்ளார்கள். உண்மையிலேயே அவர்கள் பக்கம் நியாயம் இருக்கலாம்.

எனினும், 76 நாட்களாக நடைபெறும் போராட்டத்தினை எவ்வளவு தூரம் முன்னிலைப்படுத்துகின்றீர்கள் என ஊடகவியலாளர்களிடம் வினவுகிறேன். எனவே, ஊடகவியலாளர்கள் அனைவரும் நேரடியாக போராட்டகளத்துக்குச் சென்று  விடயங்களை ஆராய்ந்து, அம்மக்களின் கருத்துக்களையும் வெளிக்கொணர வேண்டும்.

இன்றளவு இச்செய்திகளை வெளிநாட்டிலுள்ள ஊடகங்கள் முன்னிலைப்படுத்தும் அளவுக்கு  தாயகத்திலுள்ள ஊடகங்கள் முன்னிலைப்படுத்துவதில்லை. எனவே, எதிர்வரும் காலங்களில் இவ்விடயங்களை பிரதானப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.