மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – இராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தல்

‘இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்’ என்று இராமேஸ்வரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது
அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்தில் மீனவ பிரதிநிதி யேசுராஜா தலைமையில் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (27) நடைபெற்றது.  ‘இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விசைப்படகுகளில் பாக் ஜலசந்தி மற்றும் கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்காமல் மத்திய, மாநில அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் இந்தக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் இலங்கை – இந்திய இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ‘இராமேஸ்வரத்தில் இழுவை படகுகளை ஒப்படைத்து விட்டு மாற்றுத்தொழில் செய்ய விரும்பும் படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்ற தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டது.

‘இந்த தீர்மானங்களை நிறைவேற்ற வலியுறுத்தி எதிர்வரும் வெள்ளிக்கிழமை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் நேற்று கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.