காணாமலாக்கப்பட்டோர் குறித்து கடற்றொழில் அமைச்சர் கருத்து மிகுந்த மனக் கவலையை அளிக்கின்றது: லீலாவதி

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் வெளியிட்ட கருத்து மிகுந்த மனக் கவலையை அளிப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவித்ததாக அறிய முடிந்தது.

அவ் ஊடக சந்திப்பில் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும் அவர்கள் இனி உயிருடன் திரும்பப் போவதில்லை எனவும் காணாமலாக்கப்பட்டவர்கள் காணாமலாக்கப்பட்டவர்களே என்றவாறும் கருத்து தெரிவித்திருந்தார்.

உண்மையாகவே அவர் ஒரு தமிழராக இருந்தும் இப்படி ஒரு கருத்தை தெரிவிப்பது எமக்கு மிகுந்த மனக்கவலையை அளிக்கின்றது. நாம் எமது உறவுகளை தேடி 2836 ஆவது நாட்களாக போராடி வருகின்றோம்.

எமது தொடர்போராட்டத்தில் இதுவரை  300 க்கும் மேற்பட்ட பெற்றோர்களை போராட்ட களத்திலே ஆகுதியாக்கியுள்ளோம். அவர்கள் தமது பிள்ளைகளை தேடும் போராட்டத்தில் மரணத்தை தழுவியுள்ளனர். எமது வலிகளை புரியாது  ஒரு தமிழ் அமைச்சர் இவ்வாறு கருத்து கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

காணாமல் போன பிள்ளைகள்  உயிருடன் இருக்கின்றார்கள் என்ற எண்ணத்தில் தேடிக்கொண்டிருக்கின்றோம். அதை அவர் எமக்கு கூறவேண்டிய விதமாக கூறவேண்டும். அவர் இப்படி கூறுவதை மனிதாபிமானமற்ற செயலாக தான் பார்க்க வேண்டும்.

கடந்த அரசாங்கத்திலே ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் வெல்லும் வரை என்னை வெல்லச் செய்யுங்கள் நான் உங்கள் பிள்ளைகளை கண்டுபிடித்து தருகின்றேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு தேர்தலில் வென்றவுடன் பலாலிக்கு வந்து தைப்பொங்கல் அன்று எமது உறவுகள் மனம் நோகும்படி காணாமல் போன உறவுகள் யாவரும் உயிரிழந்து விட்டார்கள் என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலே, காணாமலாக்கப்பட்டோருக்கு தீர்வு வழங்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும்உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் இந்த அரசு பதவிக்கு வந்து 15 நாட்கள் ஆக முன்னரேயே இப்படியான ஒரு கருத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அமைச்சரவை பதவியேற்று சில நாட்களிலேயே ஒரு தமிழ் அமைச்சரால் இப்படியொரு கூற்று வெளியிடப்பட்டது எமக்கு அதிர்ச்சியளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.