சர்ச்சைக்குரிய கிவுல் ஓயா (Kiwul Oya) அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் விளக்கம்

கிவுல் ஓயா (Kiwul Oya) அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், அவை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டமானது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல என வலியுறுத்திய அமைச்சர், தேசிய அபிவிருத்தி மற்றும் விவசாய வளர்ச்சியை இலக்காகக் கொண்டே இது வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“இந்த ஆட்சியின் கீழ் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இடமில்லை. முந்தைய காலங்களில் அடக்குமுறைகளுக்குத் துணையாக இருந்த கட்சிகள், இன்று தமிழ் மக்களுக்கு நன்மை நடக்கும்போது தமது அரசியல் இருப்புக்காக இந்த திட்டத்திற்கு அரசியல் சாயம் பூசுகின்றன” என்று அவர் சாடினார்.
பாரம்பரிய தமிழ்ப் பகுதிகளில் இந்தத் திட்டத்தின் மூலம் நில அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட மக்கள் தொகை மாற்றத்தை அரசாங்கம் முன்னெடுக்க முயல்வதாகத் தமிழ்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

அத்துடன், உள்ளூர் மக்களின் சம்மதமின்றி, சுற்றுச்சூழல் பாதிப்புகளை முறையாக மதிப்பிடாமல் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமிழ் மக்களின் நில மற்றும் சமூக உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் சட்டத்துக்கு முரணான நிலக் கையகப்படுத்துதல் எதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதியை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தலின் போது காணி அளவீட்டுப் பணிகளுக்கு அரசியல் சாயம் பூசி குழப்பம் விளைவித்ததைப் போன்றே தற்போதும் விசமத்தனமான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.