இந்தியா – இலங்கை விவசாயம் குறித்த முதலாவது கூட்டு செயற்குழுக் கூட்டம்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான விவசாயம் குறித்த முதலாவது கூட்டுச் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை (30) டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு இந்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலாளர் தேவேஷ் சதுர்வேதி மற்றும் இலங்கை விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி. பி. விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.

இலங்கை தூதுக்குழுவில் விவசாயத் திணைக்களத்தின் மேலதிக விவசாயப் பணிப்பாளர் நாயகம் (அபிவிருத்தி) ஜி. வி. சியாமலி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பணிப்பாளர் (கால்நடை அபிவிருத்தி) பி. எஸ். எஸ். பெரேரா மற்றும் இலங்கை உயர் ஸ்தானிகரகத்தின் பிரதிநிதி ஒருவரும் கலந்துகொண்டனர்.

இந்தியத் தரப்பில், விவசாயம் மற்றும் உழவர் நலத்துறை , தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் உழவர் உரிமைகள் ஆணையகத்தின் தலைவர், விவசாய ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறை , இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பண்ணை இயந்திரமயமாக்கல், இயற்கை வேளாண்மை, விதைத்துறை அபிவிருத்தி, விவசாய தொழில்முனைவு, விவசாயக் கல்வி, மண் ஆரோக்கிய முகாமைத்துவம், சந்தை அணுகல் மற்றும் காலநிலை-தாங்குதிறன் கொண்ட விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். கூட்டு ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளும் ஆராயப்பட்டன.

டிஜிட்டல் விவசாயம், பயிர் காப்பீடு மற்றும் விவசாய ஆரம்ப செயலிகள் போன்ற முயற்சிகள் குறித்தும் இக்கூட்டத்தில் பேசப்பட்டது. இந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்பைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இலங்கை தூதுக்குழு டெல்லி, பூசாவில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு விஜயம் செய்தது.

விவசாயத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளிலும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் பொதுவான உறுதிப்பாட்டை இந்த விவாதங்கள் மீண்டும் உறுதிப்படுத்தின.